மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் தனக்கு எப்போது இருந்ததில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
முதல் படி
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன். தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துணை நடிகராக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து, தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். விஜய் சேதுபதி 1998 ஆம் ஆண்டு ‘கோகுலத்தில் சீதை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பின்னர் புதுப்பேட்டை, லீ, வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் பலே பாண்டியா போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்திலேயே நடித்தார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தென்மேற்கு பருவகாற்று’ அவருக்கு ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் வெளியான பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களும் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு ஒளியை காட்டியது. பின்னர் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதே வருடம் ‘இதற்கு தானே அசைபட்டாய் பாலகுமாரா’ படமும் வெளியாகி வெற்றி பெற்றது.
உச்ச நட்சத்திரமாக மாறிய வருடம்
இதன்பின் விஜய்சேதுபதி அடுத்தடுத்து நடித்த அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. போலீஸ் அதிகாரியாக சேதுபதியிலும், காமெடி ரவுடியாக நானும் ரவுடி தான் படத்திலும் நடித்தார். இவரை குடும்பங்கள் மத்தியில் கொண்டு சேர்த்தப் படம் தர்மதுரை. இப்படத்தில் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பின் டானாக நடித்த விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இவருக்கு ஓரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. அடுத்த வருடம் அவர் நடித்த இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்கள் ஹிட் ஆகின. 96 என்ற படம் அதே வருடம் ரிலீஸ் ஆகி இன்று வரை அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பயனத்தில் சறுக்கல்
கடந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வெளியாகின. இவை அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட்டை இவருக்கு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்த நிலையில், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் விஜய்சேதுபதி, தனது குழந்தைக்களுடன் விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது என பொழுதை கழித்து வருகிறார். முன்பெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்த இவர், சமீபகாலமாக பேட்டிகளில் மட்டும் தனது கருத்தை கூறி வருகிறார். இதுபற்றி கேட்டதற்கு, அனைத்து விஷயங்குக்கும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தேவையில்லாத வேலை
மேலும் பேசிய அவர், ஏதேனும் ஒரு கருத்து சொன்னால் அதற்கு ஆதரவும், ஏதிர்ப்பும் என இரு தரப்பினர் இருப்பார்கள். அது சமூகத்தில் சகஜமே, கருத்து சொல்லும் அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவும் முடியாது. கருத்துக்கள் சொல்லி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது. யாரையும் புண்படுத்தும் எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. என்னுடைய வேலை அதுவல்ல. யாருடயை வெறுப்பையும் பெற்று எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு சரி என்று பட்டதை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.