சியான் விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படம் வெளிவந்து 19 வருடங்கள் ஆவதையொட்டி அவரது ரசிகர்கள் #19YearsofBlockbusterdhill என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சாதித்த நடிகன்

சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகளை கடக்க இருக்கிறார் நடிகர் விக்ரம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ச்சியாக பல படங்கள் நடித்து வந்த போதிலும், பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார். சினிமாவில் ஆரம்பக் கட்டத்தில் அஜித், பிரபு தேவா, அப்பாஸ் போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்துள்ளார் விக்ரம். தன்னுடைய நடிப்புத்திறனாலும், விடா முயற்சியினாலும் “தில்”, “தூள்”, “ஜெமினி”, “சாமி”, “அந்நியன்” போன்ற ஆக்சன் படங்களில் ஹீரோவாக வலம் வந்தார். படத்திற்கு படம் வித்தியாசம், மாறுபட்ட கதாபாத்திரம் என்று தனது ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

“தில்”

கடந்த 2001ம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தில்”. இதில் லைலா, ஆஷிஷ் வித்யாத்ரி, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் மற்றும் அதிரடி ஆக்சன் நிறைந்த படமாக அமைந்திருந்த “தில்” படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். விக்ரமிற்கு இந்தப் படத்தில் இருந்துதான் ‘சியான்’ என்ற டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்நிலையில், ‘தில்’ திரைப்படம் வெளிவந்து 19 வருடங்கள் ஆவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #19YearsofBlockbusterdhill என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் அதனை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தந்தையுடன் இணையும் மகன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவும் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா மூலம் தமிழ் திரையுலகிற்கு துருவ் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது தனது தந்தையுடன் அடுத்த திரைப்படத்தில் திரையை பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். விக்ரமும் – துருவும் இணைந்து நடிக்கவுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here