இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது ஏன் என நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
நிஜத்தை காட்டும் பயோபிக்
சினிமாவில் ஒவ்வொரு காலமும் ஒரு குறிப்பிட்ட பார்முலா ட்ரெண்ட் ஆகும். ஒரு காலக்கட்டத்தில் திரில்லர் படங்கள் டஜன் டஜனாக வந்து குவிந்தன. இன்னும் சில காலக்கட்டங்கள் காமெடி படங்களாக வெளிவந்தன. அந்த வரிசையில் தற்போது பயோபிக் படங்கள் தான் டிரெண்ட். ஒரு சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுத்து வெளியிடுவது தான் இதன் வழக்கம். இந்திய சினிமாவில் பல பயோபிக் படங்கள் வெளியாகினாலும், அதில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்திய படங்களே அதிகம். உதாரணமாக பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படம் பல மொழிகளில் வெளியாகி, அனைத்திலும் சக்கை போடு போட்டது. ஒரு மிகப்பெரிய வெற்றி இப்படத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தனர். இதன்பின் 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள “83” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி
பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கபட உள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாபது; நான் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததில்லை. இதை நான் முரளிதரனிடம் கூட கூறியுள்ளேன். அதற்கு அவர், இதுபோன்ற படங்களில் நடிக்க இதுதான் முதல் தகுதி என்று கூறினார். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டியுள்ளது. ஆனால் அது சற்று கடினமானது. இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார். கிரிக்கெட் உலகில் பல சாதனைளுக்கு சொந்தக்காரரான முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சினிமா ரசிகர்களையும் தாண்டி, கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முரளிதரன் ஒருவர்தான் கிரிக்கெட்டில் சுமார் 800 விக்கெட்டுகளை எடுத்த முதல் நபர் ஆவார். அதனால் இப்படத்திற்கு “800” என்ற தலைப்பு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.