மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நினைவாக அவரது சொந்த ஊரில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்பார்க்காத மரணம்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் அவர் ரசிகர்களுக்கும் பெருமளவு அதிர்ச்சியை தந்தது. மன அழுத்தத்திற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் இறந்ததற்கான உண்மையான காரணத்தை தேடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை நடத்திய போலீசார், சுஷாந்த் சிங் அவரது படங்களில் இருந்து நீக்கக்பட்ட காரணத்தை கேட்டறிந்தனர். சுஷாந்த் மற்ற படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததாலும், சரியாக அவரால் படப்பிடிப்பிற்கு வர முடியவில்லை போன்ற காரணங்களினாலும் வேறு சினிமா பிரபலங்களை நடிக்கத் தேர்வு செய்ததாக அவர் பதில் கொடுத்துள்ளார். பிறகு சேகர் கபூர், நடிகர் சல்மான்கானின் மேனேஜர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுஷாந்த்துக்கு மரியாதை
இந்த விசாரணைகள் அனைத்தும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சுஷாந்த் சிங்கின் சொந்த ஊரான பூர்னியா என்ற இடத்தில், ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியின் மேயர் சவிதா தேவி இதுபற்றி கூறுகையில்; “சுஷாந்த் ஒரு சிறந்த கலைஞர். ஒரு சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதன் மூலம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதாக இருக்கும் என்றார். மதுபானி முதல் மாட்டா சவுக் வரை இருக்கும் இந்த சாலைக்கு “சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை” என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஃபோர்டு நிறுவனத்தின் ரவுண்டானா தற்போது “சுஷாந்த் சிங் ராஜ்புத் சவுத்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீதி கேட்கும் ரசிகர்கள்
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் சீரியல்களில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்து பல வெற்றிகளை கடந்துள்ளார் சுஷாந்த். சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், சினிமா பின்புலம் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இவரது முன்னேற்றத்தை கெடுத்ததாகவும், பல பட வாய்ப்புகளை தட்டிப் பறித்ததாகவும், அதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்றும் குற்றச்சாட்டுகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதை பற்றின பல விவாதங்களும், பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே தான் இருக்கின்றது. சுஷாந்தின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் இன்றுவரை பல இடங்களில் போராட்டம் நடத்தி கொண்டேதான் இருக்கின்றனர்.