வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. திருத்தணி, காஞ்சிபுரம் தானியங்கி மழைமானி, வெம்பாக்கம், திருவண்ணாமலை பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விரிஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், மேல் ஆத்தூர், காஞ்சிபுரம், ஏற்காடு, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
ஜூலை 11-ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான நாட்களில் வடக்கு கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி, கடலோர கர்நாடகா, லட்சத் தீவு, தென் மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி, அந்தமான் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.