கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கல்லுரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மாநகராட்சி அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
காதல் தொல்லை
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று நோய்த் தொற்று கண்டறியும் குழுவில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர் பணிகளை கல்லூரி மாணவ – மாணவிகளும் மேற்கொண்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள மண்ணடி பகுதியில் தன்னார்வலர்கள் பலர் வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் உள்ள ஒரு கல்லூரி மாணவிக்கு அதேபகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கமலக்கண்ணன் என்பவர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதுதொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஸ்பென்ட்
மாணவியின் செல்போன் எண்ணிற்கு அழைத்துள்ள மாநகராட்சி அதிகாரி கமலக்கண்ணன், நீ ரொம்ப அழகா இருக்க. உன்னுடைய டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசிக்கிறேன். 2 வருஷத்திற்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தால் திருமதி கமலக்கண்ணன் ஆகியிருப்பாய் எனப் பேசியிருக்கிறார். மேலும் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியானதை அடுத்து, உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.