வாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் தான் காரணம் என பிரபல நடிகை டாப்ஸி குற்றம்சாட்டியுள்ளார்.
வாரிசுகளின் தொல்லை
கடந்த சில நாட்களாகவே வாரிசு நடிகர்களை பற்றிய குற்றச்சாட்டு எழுந்து வருவது அதிகரித்துள்ளது. சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு மறைமுகமாக இருந்த நெபோடிசம் என்னும் சினிமா அரசியல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், திறமை இல்லாவிட்டாலும் அவர்களை முன்னேற்ற முயற்சி செய்து பல பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் ஒவ்வொருவராக முன்வந்து தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சுஷ்மிதா சென் முதல் தமிழ் நடிகைகள் வரை அனைவரும் இதனை ஒப்புக்கொண்டும் உள்ளனர். ஆனால் வாரிசு நடிகர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். பல காரணங்கள் சொல்லி மறுப்பு தெரிவித்து வந்தாலும், சுஷாந்த் சிங் மரணம் இதற்கு பெரிய உதாரணமாகவே இருந்து வருகிறது.
சுஷாந்த் மரணம்
சினிமா பின்புலம் இல்லாமல், கஷ்டப்பட்டு டிவி தொகுப்பாளராக இருந்து சீரியல்களில் நடித்து, அதன்பின் படவாய்ப்புகளும் பெற்று ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங், கடந்த 6 மாதங்களில் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றும் அவரது ரசிகர்கள் அந்த துயரத்திலிருந்து மீள முடியாத வண்ணம் இருக்கின்றனர். சுஷாந்த் சிங்கின் வீடியோக்களையும், அவர் செய்த சேட்டைகளையும், பலவிதமான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொண்டேதான் இருக்கின்றனர். சுஷாந்தின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தும் ரசிகர்கள், சினிமா பின்புலம் உள்ள முன்னணி நடிகர்கள் பலரின் மீது குற்றம்சாட்டி அவர்கள் நடிக்கும் படத்தையும், தயாரிக்கும் படத்தையும், முழுமையாகவே புறக்கணித்து வருகின்றனர். சமீப காலமாகவே பல பேர் தாங்கள் இழந்த பட வாய்ப்பை பற்றி பேசி வந்த நிலையில், இப்போது புதிதாக அந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறார் நடிகை டாப்ஸி.
குற்றம் கூறிய டாப்ஸி
ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டாப்ஸி. அவரும் இந்த சினிமா அரசியலை ஓப்புக்கொண்டுள்ளார். என்னதான் திறமை இருந்தாலும், சினிமா பின்புலம் உள்ள நடிகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் இவ்வாறு நடப்பதற்கு ரசிகர்களும் ஒரு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புதுமுக நடிகர், நடிகைகள் என்றால் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று அவர்களின் படத்தை பார்ப்பதை புறக்கணித்துவிட்டு, சினிமா பின்புலம் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளின் படத்தை மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து அவர்களை வளர்த்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் இப்படிக்குறை கூறும் நடிகர், நடிகைகளை வாரிசு நடிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். சினிமா பின்புலம் இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே ஒரு துறையில் ஜெயிக்க முடியும் என்று பல வாரிசு நடிகர்கள் கூறி வருகின்றனர்.
வாரிசை புறக்கணிப்பார்களா?
வாரிசு நடிகர்களை குறைகூறும் அனைவரும், அவர்கள் குழந்தைகள் சினிமாத் துறையில் வரும் ஆசை இருந்தால் அவர்கள் அதை புறக்கணிக்கவா போகிறார்கள். அதற்கான அமைப்புகளை அவர்கள் ஏற்படுத்தி தானே கொடுப்பார்கள்? அதை தானே எங்கள் பெற்றோர்களும் செய்தார்கள் என்று பலவகையாக குற்றம் கூறி வருகின்றனர். ஆனால் என்னதான் பல பேர் பல கருத்துக்களை சொன்னாலும் சினிமா பின்புலம் உள்ள நடிகர்களின் ஆதிக்கம் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற அனைத்து துறைகளிலும் தலை விரித்து ஆடுவதை பொதுமக்களும் ஒப்புக் கொண்டுதான் இருக்கின்றனர்.