தமிழக – கேரள எல்லைப்பகுதியில் சாலையை கடந்த யானை ஒன்று தடுப்புச் சுவரை தாண்ட முடியாமல் தவித்த தனது குட்டியை லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உலா வரும் வனவிலங்குகள்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு செல்லும் மலைப்பாதை அமைந்துள்ளது. இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதியுடன் காணப்படும் இந்தப் பகுதியில், காட்டு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் எப்போதும் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சர்வ சாதரணமாக சாலைகளில் உலா வரத் தொடங்கியுள்ளன.
யானையின் தாய்ப்பாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கீழ்நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் பிறந்து 2 மாதங்களே ஆன குட்டியானையுடன் 2 காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்தன. இதனை கண்ட வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். அந்த நேரத்தில் சாலையைக் கடந்த குட்டி யானை, அங்கிருந்த தடுப்புச் சுவரை தாண்ட முடியாமல் தவித்தது. அப்போது தாய் யானை தடுப்புச் சுவரை தாண்டிச் செல்ல தனது குட்டியானைக்கு பயிற்சி அளித்தது. இந்த நெகிழ்ச்சியான காட்சியை தங்களது செல்போனில் பதிவு செய்த வாகன ஓட்டுநர்கள், அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.