உலகம் இன்று சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடி உரை
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சர்வதேச புத்த கூட்டமைப்பு, மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஆஷாத பூர்ணிமா தர்ம சக்ரா திவஸ் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இருந்து தர்ம சக்ரா தினத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், 21ம் நூற்றாண்டு பற்றி தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அந்த நம்பிக்கை தனது இளம் நண்பர்களிடமிருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரகாசமான இளம் மனங்கள் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்ட மோடி, புத்தரின் எண்ணங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புத்தரின் கொள்கைளில் தீர்வு
உலகம் இன்று சந்தித்து வரும் பல சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளதாகவும், உலகம் அசாதாரண சவால்களை எதிர்த்துப் போராடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சவால்களுக்கு, புத்தரின் கொள்கைகளிலிருந்து நீடித்த தீர்வுகள் வரலாம் எனவும் அவர் கூறினார். புத்த மதம் மக்களுக்கு, ஏழைகளுக்கு, பெண்களுக்கு, அமைதி மற்றும் அகிம்சைக்கு மரியாதை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். எனவே, புத்த மதத்தின் போதனைகள் ஒரு நிலையான கிரகத்திற்கான வழிமுறையாகும் எனவும், புத்தரின் பாதை பல சமூகங்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வை நோக்கிய வழியைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.