வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரத்தில் 7 சென்டி மீட்டர், திருக்கழுக்குன்றத்தில் 5 சென்டி மீட்டர், கேளம்பாக்கம், வந்தவாசி, மதுராந்தகத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மத்திய வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.