டிக் டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டிக் டாக் புகழ் ஜிபி முத்து கோரிக்கை விடுத்துள்ளார். டிக் டாக் இல்லாமல் போனதால் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் புலம்பி தீர்த்துள்ளார்.

டிக் டாக்

இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும் ஆச்சரியத்தோடுதான் பார்க்க முடிகிறது. தங்களையும், தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த டிக் டாக் செயலி, பயனர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் அதன் மேல் உள்ள அதிகப்படியான மோகத்தால் சர்ச்சை மற்றும் குற்ற நடவடிக்கையில் பலபேர் சிக்கிக்கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. பல மாநிலங்களில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் என டிக் டாக் செயலியில் இடம்பெறாத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

மத்திய அரசு தடை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் பயன்படுத்தாத ஆளே இல்லை எனக் கூறலாம். குறிப்பாக லாக்டவுன் காலத்தில் டிக் டாக்கின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

பிரதமருக்கு கோரிக்கை

இந்நிலையில், டிக் டாக் புகழ் ஜிபி முத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கையை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே, இந்த டிக் டாக்கை எப்படியாவது ஓபன் பண்ணுங்க, எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு, மனசுக்கு ரொம்ப க்ஷ்டமா இருக்கு. எனவே எப்படியாவது இந்த டிக் டாக்கை ஓபன் பண்ணிவிடுங்க” என அழுது புலம்பியபடி பேசியுள்ளார். டிக் டாக் புகழ் ஜிபி முத்துவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here