கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மக்களின் உயிர்களை காத்து வரும் மருத்துவர்கள் தான் உண்மையான ஹீரோ என நடிகை வரலட்சுமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சிறந்த நடிகை
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, 2012ம் ஆண்டு போடா போடி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், சில வருடங்கள் தமிழில் நடிக்காமல் மற்ற மொழிப் படங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர் 2016ல் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்குப்பிறகு மிகவும் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார். விஜய்யுடன் சர்க்கார் படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்தார். தற்போது தன் கைவசம் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். அந்தப் படங்களின் பணிகள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பேக்கரி தொழில்
லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். தற்போது சினிமா பணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், பேக்கரி கம்பெனியை வரலட்சுமி துவங்கியுள்ளார். “Life of pie” என பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலமாக, ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது; சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை துவங்கினேன். ‘Life of pie’ மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டாட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். ஆனால் அது ஒரு பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன்.
மருத்துவர்கள் தான் ஹீரோ
கொரோனா எல்லோருடைய வாழ்க்கையிலும் வருவதற்கு முன்பாக சினிமாவில் உள்ளவர்கள் தான் நிஜ ஹீரோக்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதனை இல்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்த கொரோனா. ஒரு கடவுளாய் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றும் மருத்துவர்கள் தான் நிஜமான ஹீரோக்கள். இந்த உயிரைக் காக்கும் பணியில் செவிலியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் ஊரைச் சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களின் பணி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். பாதுகாப்போடு உங்களுடைய வேலைகளை செய்யுங்கள் அதேசமயம் எங்களுடைய அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.