தமிழில் வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய – மாநில அரசுகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையுலக பணிகள் முற்றிலும் முடங்கியது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வந்தனர். இந்த நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் சீரியல் பணிகள் மீண்டும் துவங்கியது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை தொலைத்த பலர், மீண்டும் பணிக்கு திரும்பினர்.
நடிகைக்கு கொரோனா
இந்நிலையில் சின்னத்திரை சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, ரன், அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். உரிய பாதுகாப்புடன் சீரியல் பணிகள் துவங்கிய போதிலும், பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகை நவ்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைதொடர்ந்து நவ்யா சுவாமி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி
தற்போது அவர் தெலுங்கு சீரியல் படப்பிடிப்பில் உள்ளதால், அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அனைத்து நடிகர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து சீரியல் பணிகளில் இவர் கலந்துகொண்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலமான நவ்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து நவ்யா சுவாமி கூறுகையில்; “நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. அதன்பின்னர் இப்போது என்னையே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். இதுவும் கடந்து போகும். கண்டிப்பாக விரைவில் மீண்டு வருவேன். இதை காரணமாக கொண்டு எந்தவித சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.