புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை, படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கிளவிதம்மம் ஊரணிப் பகுதியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு, இந்த கொலை சம்பந்தமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடும் கண்டனம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் – குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்! எனக் குறிப்பிட்டுள்ளார். பால்மணம் மாறாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குவதாகவும், இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல்
இதனிடையே, சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.