பீட்டர் பால் அசைவம் சாப்பிட மாட்டார் என நடிகை வனிதா கூறிய நிலையில், இன்று அவர் செய்த சிக்கனை பீட்டருக்கு ஊட்டிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. 
பீட்டருடன் திருமணம்
விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாக இருக்கிறார். அவர் கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தனது திருமணத்திற்கு மகள்களும் துணை நிற்பதாக கூறிய வனிதா, பீட்டர் பால் வந்தபிறகு தனது வாழ்வில் வசந்தம் வீசுவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வர நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்தனர்.
திருமண சர்ச்சை
திருமணம் முடிந்த உடனே வனிதாவின் மூன்றாவது வாழ்க்கையும் சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு காரணம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் அளித்த புகார்தான். தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் பீட்டர் ஒரு குடிகாரர் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். எலிசபெத் போலீசில் புகார் அளித்துள்ளதை பார்த்த சக நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரையா வனிதா திருமணம் செய்து கொண்டார் என்று பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி அளிக்கும் வகையில், வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார் வனிதா. அதில், பீட்டர் பாலை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், பீட்டர் ஒரு டீட்டோட்டலர் என்றார். பீட்டர் அசைவ உணவுகள் கூட சாப்பிடுவதில்லை எனவும் கூறியிருந்தார். 
சிக்கன் சைவமா?
இந்த நிலையில் இன்று தனது யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியை நடத்திய நடிகை வனிதா, KFC சிக்கன் செய்வது எப்படி என தனது மகளுடன் இணைந்து செய்து காட்டினார். யூடியூப் லைவ்வில் நடந்த இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அப்போது நிகழ்ச்சி முடியும் போது சமையலறைக்கு வந்த பீட்டர் பாலுக்கு, வனிதா தான் செய்த சிக்கனை ஊட்டிவிட்டார். மேலும் சிக்கனுக்கு பீட்டர் கிஸ் கொடுப்பதாகவும் அவர் பூரிப்புடன் கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அசைவ உணவே சாப்பிடாத பீட்டர் பால் சிக்கன் மட்டும் சாப்பிடுகிறாரே, அது சைவமா? எனக் கிண்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். டீட்டோட்டலர் மற்றும் அசைவ உணவே சாப்பிடமாட்டார் என வனிதாவால் கூறப்பட்ட ஒருவர், தற்போது அவர் கையாலேயே சிக்கன் சாப்பிடும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. வனிதா விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், அவர் பங்கிற்கு மேலும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.















































