கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிக்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், தந்தை ஜெயராஜூம் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதியே

பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “இந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் என்றும் கிடப்பில் கிடக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து மக்கள் மறந்துவிடுவார்கள் என காத்திருக்காமல் நீதியை காத்திருங்கள் என்றும் “காலம் தாழ்த்தப்பட்ட நீதி எப்போதும் அநீதி தான்” என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தண்டனை கிடைத்தே ஆகவேண்டும்

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மேஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும், விடக்கூடாது.” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மேலும், #சத்தியமா விடவே கூடாது என்றும் ரஜினிகாந்த் தனது டுவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

துடித்துப் போனேன்

சாத்தான்குளம் சம்பவம் பற்றி இயக்குநர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு… நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இந்த அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள். காத்து நிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது. விரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். குற்றமற்றவர்களைத் தண்டிப்பதே தவறு என்ற ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோமே. அந்த உயிர்களின் வலியும், வேதனையும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படி துடித்துப்போவேனோ அப்படி துடித்துப் போகிறேன்… அவர்களும் நம்ம வீட்டுப் பிள்ளைகள்தானே? என்று மன வருத்துத்துடன் பாரதிராஜா கூறி உள்ளார்.

காவலர் ரேவதி

மேலும், தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. அது அரசோ, காவல்துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாக அமைய வேண்டும். அதுவே வரும் காலங்களில் மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை இந்த ஆட்சிக்கு ஏற்படுத்தித் தரும். அகால மரணமடைந்த ஜெயராஜூக்கும், பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல, இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான்குள காவல் அதிகாரிகள் என்பதை முதல்வர் மனதாரப் புரிந்துகொள்ள வேண்டும். இக்குற்றத்தின்போது உடனிருந்த காவலர் ரேவதி மனசாட்சியின்படி நடந்துகொண்டதைப் பார்க்கும்போது மன ஆறுதலைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் ரேவதியின் பாதுகாப்பை இவ்வரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கோள்கிறேன். இரவு பகல் பார்க்காமலும், கொரானாவின் தாக்கம் கண்டு தனியறைக்குள் புகுந்துகொள்ளாமலும் முகக்கவசத்தை அணிந்துகொண்டும் களப்பணியாற்றும் உங்கள் ஒட்டுமொத்த நற்பெயரை ஒரே சம்பவத்தில் சிதைத்த அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே பாதிக்கப்பட்ட உங்களுக்கும் அவ்வப்பாவிக் குடும்பத்திற்கும் ஈடுகட்டப்பட்ட நீதியாகப் பார்க்கப்படும். ஆதலின் என் குரலை ஒவ்வொரு தமிழனின் ஆதங்கக் குரலாக எடுத்துக் கொண்டு, துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகின் சார்பாக வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here