சினிமாவில் மிகப்பெரிய பின்புலம் இருந்தும் சில நடிகர்களின் வாரிசுகள் இன்றுவரை ஒரு ஹிட் படம்கூட கொடுக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
பல வாரிசுகள்
தமிழ் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த பல திரைப் பிரபலங்களின் வாரிசுகள் திரைப்படத்துறை மட்டுமின்றி பல துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். எனினும் என்னதான் திரைப் பின்புலம் இருந்தாலும் ஒருவரிடம் திறமை என்பது இல்லை என்றால் திரைப்படங்களில் ஜொலிப்பது மிக மிகக் கடினமே. அவ்வாறு திரைப் பிரபலங்களின் வாரிசுகள் அனைத்துத் திறமைகளும் இருந்தும் ஜெயிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். திறமை இல்லாவிட்டால், பின்புலம் இருந்தாலும் சினிமாவில் நீடிப்பது கடினம் என்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜா
மிகப்பெரிய நடிகர்களை வைத்து தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் பாரதிராஜா. முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற பல படங்களை இயக்கி அதற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இப்பொழுதுள்ள உச்ச நட்சத்திரங்களின் திரை வாழ்க்கையில் பல ஹிட் படங்களை கொடுத்து திருப்புமுனையாக இருந்தவர் அவர். பாரதிராஜா தன் மகனான மனோஜ் பாரதிராஜாவை முதன்முதலில் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் மணிரத்தினத்தின் எழுத்து, ஏ.ஆர். ரகுமானின் இசைக்கோர்ப்பு என அனைத்தும் சிறப்பாக இருந்த தாஜ்மஹால் படத்தை, பாரதிராஜாவே இயக்கியிருந்தார். இவ்வளவு இருந்தும் இவருக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையவில்லை. இதைத்தொடர்ந்து அப்போது வெற்றி இயக்குநராக வலம் வந்த சரண் இயக்கி மனோஜ் நடித்த அல்லி அர்ஜுனா படமும் கைகொடுக்கவில்லை. தமிழ் திரைத்துறையில் பல ஹிட்டுகளை கொடுத்த பாரதிராஜாவின் வாரிசான மனோஜ் பாரதிராஜா, இன்றுவரை ஒரு ஹிட் படத்தைக்கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
சாந்தனு பாக்யராஜ்
சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என இந்திய சினிமாவில் புகழப்பட்டு வருபவர் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ். இவரின் மகனான சாந்தனு பாக்யராஜ் ‘சக்கரகட்டி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்ததால் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘டாக்சி டாக்சி’ பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால் படம் என்னவோ படுத்துக்கொண்டது. சக்கரகட்டியை தொடர்ந்து சித்து பிளஸ் டூ, வாய்மை, முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஏஞ்சல் ஜான் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். நடனத்தில் மிகச் சிறந்து விளங்கும் சாந்தனு பாக்யராஜ், தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தும், மிகப்பெரிய சினிமா பின்புலம் இருந்தும் இன்று வரை ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகா நாயர்
1990களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் ராதா. இவரின் மூத்த மகளான கார்த்திகா நாயர் முதன்முதலில் தெலுங்கில் ஜோஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இவர் அறிமுகமான முதல் படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து இரண்டிலும் சிறந்த புதுமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றார். இவ்வாறு அதிரடியாக இறங்கிய கார்த்திகா நாயர், பார்க்க மிகவும் அழகாகவும், வசீகரிக்கும் கண்களுடனும் இருந்ததால் நல்ல வரவேற்பும், ரசிகர்களின் ஆதரவும் ஆரம்பத்தில் இருந்தது. மேலும் இவர் நடிகை ராதாவின் மகள் என்பதால் கூடுதல் கவனம் ரசிகர்களிடம் இருந்து வந்தது. எனவே இவரின் அம்மாவைப் போன்று இவரும் திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வந்த வேகத்திலேயே திரும்பி சென்றுவிட்டார். இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. மேலும் இவர் நடிப்பில் அருண் விஜய் உடன் இணைந்து நடித்த வா டீல் படம் பல ஆண்டுகளாக ரிலீசுக்கு வராமல் டீலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. எனவே வா டீல் படம் இந்த ஆண்டு OTTயில் வெளியாகிறது என ஒருசில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு மிகப்பெரிய திரைத்துறை பின்புலம் இருந்தும், நல்ல நடிப்புத் திறமை, அழகு என எல்லாம் இருந்தும் கார்த்திகா நாயர் திரைத்துறையில் ஏனோ ஜொலிக்கவில்லை.
ஐஸ்வர்யா அர்ஜுன்
தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் மிகவும் பிரபலமானவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் முதன்முதலில் விஷாலுடன் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற ஐஸ்வர்யா, பல மொழிகளில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகக் குறைவான படங்கள் மட்டுமே நடித்து வெற்றிப்படங்கள் எதுவும் கொடுக்க முடியாமல் இருந்து வருகிறார்.பார்க்க மிகவும் லட்சணமான கதாநாயகிக்கான அனைத்துத் தகுதிகளும் இருந்தும் தன் அப்பாவை போன்று இன்னும் ஏன் திரையில் ஜொலிக்க முடியவில்லை என இன்றுவரை தெரியவில்லை.
சிபி சத்யராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் சத்யராஜ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பட்டையை கிளப்புவார். அதேபோல் மற்றவர்களை நக்கல் செய்வதிலும் இவரை அடித்துக்கொள்ள யாருமே கிடையாது. சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம், இவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கட்டப்பாவாக உலக மக்களுக்கு அடையாளப்படுத்தியது. இந்நிலையில் இவரின் மகனான சிபி சத்யராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி லீ, நாய்கள் ஜாக்கிரதை, கட்டப்பாவ காணோம் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் இவருக்கு இன்றளவும் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஏதும் அமையவில்லை.
ஸ்ருதிஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் பல திறமைகளை கொண்டு இருந்தாலும், தங்களது நடிப்பால் ஹிட் படங்கள் என்று தமிழில் கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் கடல் படத்தில் நடித்ததற்கு பிறகு, ஹிட் படங்கள் ஏதும் கொடுக்கவில்லை. இவ்வாறு மிகப்பெரிய பின்புலம் இருந்தும், திரைப்படங்களில் மிக எளிதாக அறிமுகமாகி இன்றளவும் வாரிசு நடிகர்களால் தங்களின் திறமையை நிரூபிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.