இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளதால் டிக் டாக்கே கதி என மூழ்கிக் கிடந்த டிக் டாக்வாசிகள் கண்ணீர் விடாத குறையாக கதறி வருகின்றனர்.

குற்றம், ஆபாசம்

இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும் ஆச்சரியத்தோடுதான் பார்க்க முடிகிறது. தங்களையும், தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த டிக் டாக் செயலி, பயனர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் அதன் மேல் உள்ள அதிகப்படியான மோகத்தால் சர்ச்சை மற்றும் குற்ற நடவடிக்கையில் பலபேர் சிக்கிக்கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இதில் அரசு அதிகாரிகளும் விதி விலக்கல்ல. இதனால் பல மாநிலங்களில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் என டிக் டாக் செயலியில் இடம்பெறாத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

டிக் டாக் மோசடி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் பயன்படுத்தாத ஆள் இல்லை எனக் கூறலாம். குறிப்பாக இந்த லாக்டவும் காலத்தில் டிக் டாக்கின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நடிகை திரிஷா சமீபத்தில் டிக் டாக்கில் நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களிடம் ஏகப்பட்ட லைக்ஸ்களை பெற்றார். அதற்கு நேர்மாறாக நடிகை பூர்ணா, டிக் டாக் மூலம் அறிமுகமான நபரிடம் பழகி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்தார். டிக் டாக்கினால் ஒருசில சாதகங்கள் இருந்தாலும், பெருமளவில் பாதகங்களே இருப்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதிரடி தடை

இந்த நிலையில், எல்லைப்பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சீன பொருட்களையும் இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கதறும் டிக் டாக்வாசிகள்

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அதனை பயன்படுத்திக் கொண்டிருந்த டிக் டாக்வாசிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக டிக் டாக்கே கதி என இருக்கும் நிறைய பேர் கதறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு சில பேர் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். டிக் காக் செயலி தடை செய்யப்பட்டதையடுத்து அதற்கு மாலை போட்டு துக்கம் அனுசரிக்கும் டிக் டாக் வீடியோக்களும் உலா வருகின்றன. அதிலும் சிலர், நம்பிக்கையோடு இருப்போம், நல்லதே நடக்கும் என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், எனக்கு இவ்வளவு நாள் ஆதரவு தந்தமைக்கு ரொம்ப நன்றி என்று கூறுகின்றனர்.

டிக் டாக் நிறுவனம் கருத்து

இதனிடையே, டிக் டாக், ஹலோ செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த பைடன்ஸ் நிறுவனம், புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே இந்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், பழைய பயனர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசின் இந்தத் தடை, தற்போதைய வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்றும் கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here