பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், திடீரென யூடியூப் லைவ்வில் தோன்றிய வனிதா அதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்ததுடன், பல கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
திருமண சர்ச்சை
விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த 27ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது பீட்டர் பாலை அவர் கரம் பிடித்துள்ளார். திருமணம் நடந்த மறுநாளே பீட்டரின் முதல் மனைவி மூலம் வனிதாவுக்கு பிரச்சனை ஆரம்பமானது. விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாகவும், தன் கணவர் தனக்கு வேண்டுமெனவும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செய்தி மீடியாவுக்கு தெரியவர, விவாகரத்து செய்யாத ஒருவரை வனிதா திருமணம் செய்துகொண்டதாக திரையுலகினர் பேசத் தொடங்கிவிட்டனர்.
மூக்கை நுழைப்பது சரியல்ல
இந்த நிலையில், திடீரென தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் லைவ்வில் தோன்றிய நடிகை வனிதா தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; திருமணத்திற்கு முன்பு ஒரு மாதமாகவே தனது திருமண பத்திரிகைகள் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிக் கொண்டிருந்த நிலையில், இந்த திருமணத்தை பற்றி பலரும் பல வகையில் விமர்சித்து வந்தனர். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். யாரும் அதில் குறுக்கிட நான் அனுமதிக்க மாட்டேன். பீட்டர் தனது முதல் மனைவியை பற்றியும் குடும்பங்களைப் பற்றியும் தவறாக என்னிடம் ஏதும் கூறியதே கிடையாது. ஆனால் அவர்கள் ஏழு வருடம் பிரிந்து இருந்ததை என்னிடம் கூறினார். அதை நானும் ஒப்புக்கொண்டேன். அவர்களுக்கு முடிவடைந்த வாழ்க்கையை பற்றி நான் மீண்டும் மீண்டும் விவாதிப்பது சரியல்ல. மற்றவர்கள் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது எனக்கு பிடிக்காது, அதுபோல் என் வாழ்க்கையில் மற்றவர்கள் வருவதும் எனக்கு பிடிக்காது.
இது என்ன நியாயம்?
பீட்டர் பால் தனது முதல் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் அவரை நான் பிரித்து எடுத்துக்கொண்டு திருமணம் செய்தேன் என்றும் பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் இவ்வாறு குறை கூறுபவர்கள் அவர் எதுவும் செய்யவில்லை என்பதை நேரில் பார்த்தார்களா? யாரைப் பற்றியும் முழுதாக தெரியாமல் குறை கூறுவது மிகவும் தவறு. என் குழந்தைகளுடன் அவரது முதல் மனைவியின் குழந்தைகள் தினமும் பேசிக்கொண்டுதான் இருந்தனர். அப்படி இருக்க அப்போதெல்லாம் தன் கணவர் வேண்டும், தன் பிள்ளைகளுக்கு அப்பா வேண்டும் என்று அக்கறை இல்லாமல், திருமணம் செய்த பிறகு மட்டும் கணவர் வேண்டும் என்று கேட்டால் என்ன நியாயம். அப்போதெல்லாம் இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்தது. பணத்திற்காகத்தான் என்னுடன் பீட்டர் திருமணம் செய்து கொண்டதாகவும் பலர் கூறி வருகின்றனர். பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை ஏதும் கிடையாது. நான் கஷ்டத்தில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவவில்லை.
பேச்சில் தெளிவு
ஒரு ஆணை பிடிக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் குறை கூறலாம், எந்த கருத்துக்களை வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஆனால் அந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையா? பொய்யா? என்று அவரவர் மனதிற்கு மட்டும் தான் தெரியும். இதுபோன்ற பல கருத்துக்களை யூடியூப் வீடியோவில் வனிதா கூறியுள்ளார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் பேசிய வனிதா, தனது கருத்திலும், பேச்சிலும் தெளிவாகவே இருக்கிறார் என்பது அதனை பார்த்தவர்களுக்கு புரியும்.