தமிழகத்தில் ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே உள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ந் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பிற இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவக் குழுவுடன் ஆலோசனை
பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறிச் செயல்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இ-பாஸ் இல்லாத நபர்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மருத்துவ நிபுணர் குழு, ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைக்கவில்லை என தெரிவித்தது.
ஜூலை 31 வரை நீட்டிப்பு
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நாளையுடன் நிறைவடையும் நிலையில், அரசு எந்த மாதிரியான உத்தரவு பிறப்பிக்கும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், இன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 5,12,19,26 ஆகிய ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களிலும் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, சுற்றுலாத் தலங்களுக்குத்தடை நீட்டிக்கப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை எனவும் கூறியுள்ளது. மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.