நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
பயோப்பிக்
அண்மையில் ஸ்டேண்ட் அப் காமெடியன் அலெக்ஸ் பாபுவின் புதுவிதமான ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி பெரிய ஹிட் அடித்தது. அதில் அவர் பேசிய போது எஸ்பிபி, ஜேசுதாஸ் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பாடியதால், மலேசியா வாசுதேவனை 8000 பாடல்கள் பாடியும் ‘அன்ஸங்க் ஹீரோ’வாகவே இன்றும் இருக்கிறார் எனக் கூறினார். இதையடுத்து அவரது மகன் யுகேந்திரன் மலேசியா வாசுவேதனின் வாழ்க்கை வரலாற்றை பயோப்பிக்காக எடுக்கப்போவதாக அறிவித்தார். அவரது பாடி லாங்வேஜ் விஜய் சேதுபதிக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் எஸ்பிபி
பாலக்காட்டில் பிறந்து மலேசிய ரப்பர் தோட்டத்திற்குப் பெயர்ந்த பெற்றோரின் கடைசி மகன். குடும்பத்திற்கே பாடும் கலை கைவந்தது. மலேசியாவிலேயே நண்பர்களோடு பாடியும், நாடகம் நடித்தும் வந்தவர் மலேசியாவின் முதல் தமிழ்ப் படமான ரத்தப் பேய்யில் நடித்தார். பின் சில நண்பர்களோடு பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இளையராஜா சகோதரர்களுடன் நடத்தி வந்த ‘பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழுவில் சேர்ந்தார். பின் இளையராஜா முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளியில் பாடினார்.
பிரபலமான பாடல்கள்
16 வயதினிலேவில் சப்பானியாக கமல் பாடிய ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’தான் முதல் ஹிட். அதன்பின் கிராமியப் படங்கள் அதிலும் சிவாஜியின் முதல் மரியாதை, ரஜினியின் பொதுவாக என்மனசு தங்கம் என்று, அவர் கணீர் குரலுக்காகவே வெற்றிபெற்ற பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.பி. நாகராஜன் தான் வாசுதேவனாக இருந்தவருக்கு மலேசியா வாசுதேவன் என்று பெயர் சூட்டினார். 80க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவரது மகன் யுகேந்திரன் அடுத்த தலைமுறை வாரிசுகளான யுவன் சங்கர் ராஜா மற்றும் எஸ்பிபி சரன், வெங்கட் பிரபு ஆகியோருடன் நடிக்கவும், பாடவும் செய்தார். மகள் பிரசாந்தினியும் ‘வாரணம் ஆயிரம் படத்தில் ’முன்தினம் பார்த்தேனே’ பாடலைப் பாடினார்.
விஜய் சேதுபதி நடிப்பாரா?
இலங்கை கிரிக்கெட் அணியில் ஜொலித்த தமிழர் முத்தையா முரளிதரனுடைய சுயசரிதை உட்பட டஜன் கணக்கில் படங்களைக் கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, யுகேந்திரனின் அழைப்பை ஏற்று இந்த படத்தில் நடிப்பாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மக்கள் செல்வன் மக்கள் சொல்லைத் தட்டமாட்டார் என்றே நம்புவோம்.