விஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ்
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. தற்போது ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறாமல் இருக்கிறது.
போட்டியாளர்கள் தேர்வு
இது ஒருபுறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் போது பல பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
எதுவும் நடக்கவில்லை!
கொரோனாவால் எதுவும் நடக்கவில்லை. மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல்களின் ஷூட்டிங்கே கொஞ்ச நாள் முன்புதான் தொடங்கியதாகவும், அதற்குள் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு வந்துவிட, தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஜய் டிவி தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு பிக் பாஸ் சீசன் 4க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 4வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.