தர்மா புரொடக்ஷன்ஸ் எனும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நடத்துபவர் கரன் ஜோஹர். இயக்குநர், கதாசிரியர், நடிகர், ஆடை வடிவமைப்பாளர், தொகுப்பாளர் இப்படி இவருக்குப் பல முகங்கள் என்றாலும் பலருக்கும் தெரியாத முகம் ஒன்று இருந்தது. அது வெளியில் தெரிய வரவே இவர் தொகுத்துவந்த பிரபல தொலைக்காட்சித் தொடரான காஃபி வித் கரன் 7வது சீஸனை சுஷாந்தின் மரணத்தை ஒட்டி எழுந்த சர்ச்சையால் ஸ்டார் வோர்ல்ட் நிறுவனம் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
நாரதர் கலகம்
பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி திரையுலகில் பட், சோப்ரா, கபூர், கான், ஜோஹர், ரோஷன் போன்றவை மிகவும் வலிமையான குடும்பங்கள் என்பதைவிட, குழுமங்கள் அல்லது நட்சத்திர மண்டலங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவர் இயக்குநராகவும், மற்றொருவர் தயாரிப்பாளராகவும், வேறொருவர் நடிகராகவும் வைத்து படங்களை எடுத்து வருகிறார்கள். எல்லா இடங்களிலும் சப்லாகட்டை சகிதம் நாரதரைப்போல், ஒரு கோப்பையும் கையுமாக சுற்றி வருபவர் சாட்சாத் நம் கரன் ஜோஹர்தான். மேற்சொன்ன குடும்பங்களில் ஒரு குழந்தை பிறந்து பெயர் சூட்டியதுமே குழந்தையின் ஜாதகத்தை கரன் கையில் கொடுத்துவிடுவார்கள். நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த முறை அது நடக்குமா என்பது தெரியவில்லை.
பிரைவெட் ஜெட் பரிதாபங்கள்
இவர் இயக்கும் தயாரிக்கும் படங்களில் வரும் பெரும்பான்மையான நாயகர்கள் அல்லது நாயகிகள் பிரைவெட் ஜெட்டில் பறக்கும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகள். இருந்தாலும் பாசத்திற்காக ஏங்குவது போன்ற பாத்திர அமைப்பு கொண்டதாக இருக்கும் கதைக்களம். டிப்ரஷன் என்ற சொல்லை ஒரு சமூக அந்தஸ்தாகவே இவர்கள் கருதுகிறார்கள். தீபிகா படுகோன் தான் டிப்ரஷனிலிருந்து மீண்டது எப்படி என்பதைப் பற்றி பேட்டி அளித்தார். அதையடுத்து தானும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை டிப்ரஷனில் கழித்ததாக பேட்டியளித்தார் கரன். ‘டியர் சிந்தகி’ என்று டிப்ரஷனைக் குறித்து பேசும் படத்தில் நடித்தவர் ஆலியா பட். தயாரித்தவர் கரன்.
ரேப்பிட் ஃபையர் என்ற பெயரில் ரேகிங்
இந்தி மட்டுமல்ல இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்து வகிக்கும் பிரபலங்களை அழைத்து காபி குடித்துக்கொண்டே சில கிசுகிசுக்களைப் பகிர்வது என்பதுதான் காஃபி வித் கரன் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதில் ரேப்பிட் ஃபையர் எனும் பகுதியில் வரும் விருந்தினரை ஒரு வார்தையில் பதில் அளிக்க வேண்டும். அது போன்ற ஒரு நிகழ்ச்சியின்போது சுஷாந்த் சிங்கைப் பற்றிய கேள்விக்கு ஆலியா பட், சோனம் கபூர் அவரை ரேக் செய்யும் விதம் அளித்த பதில் சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு பரவலாக பேசப்படுகிறது. பெரிய பின்புலம் இல்லாமல் வந்து தேசிய விருது வாங்கும் அளவிற்கு தன் நடிப்பால் உயர்ந்த கங்கனா முதன்முதலில் கரனின் இந்தப் போக்கை கேள்விக்குள்ளாக்கினார்.
தர்மம் தலைகாக்குமா?
சுஷாந்தின் மரணத்தின் பின்னணியில் ஆலியா பட்டின் தந்தை மஹேஷ் பட், கரன் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரின் பெயர் அதிகம் அடிபடுவதால், அடுத்த சீசன் காஃபி வித் கரன் தொடங்கினால் அதில் பங்கேற்க பிரபலங்கள் தயாராக இல்லை. இதனால் இப்போதைக்கு அதைத் தொடங்கும் முடிவை தயாரிப்பாளர்கள் தள்ளிவைத்துள்ளனர். பிரமாஸ்திரம் என்ற பெயரில் மூன்று பாகங்கள் கொண்ட மெகா பட்ஜட் வரலாற்றுப் புதினத்தைத் தயாரிப்பதில் கரன் இறங்கியிருக்கிறார் என்ற சேதி 2017இல் முதன் முதலில் வெளியானது. ஆறு வருடங்களாக இதன் கதை உருவாக்கத்தில் செலவிட்ட அயன் முகர்ஜி இதற்கான முதல் கட்ட வேலைகளை ஜனவரி 2018ல் தொடங்கினார். இந்திய திரை நட்சத்திரங்களில் பீஷ்மராக வலம்வரும் அமிதாப் பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் ரன்பிர் கபூர், ஆலியா பட் மற்றும் பலர். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் பாகம் வெளியாகும் என்று அறிவித்து பின் அது தள்ளிப்போனது. மீண்டும் டிசம்பர் 2020இல் முதல் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பை பிப்ரவரியில் விளையாட்டாக வெளியிட்டார்கள். கொரோனா ஊரடங்கை அடுத்து இதற்கான சாத்தியம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. எது எப்படியோ அடுத்த 10 வருடங்களுக்கு கரன் பிரமாஸ்திரத்தை தயாரிக்கும் வேலைகளில் மூழ்கிப்போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டு வருவாரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.