மும்பையில் தங்கியிருக்கும் நடிகை கார்த்திகா நாயர் தனது வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
உச்சத்தில் மின் கட்டணம்
கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாகி மின் கட்டணமும் பெருமளவு உயருகிறது. இதனை காரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று சினிமா பிரபலம் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்ததால், அதில் பெருமளவு மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா “மின்சார வாரியம் அதிகமாக கொள்ளை அடிக்கிறது” என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அந்த டுவிட்கள் வைரலாக பரவி வந்தன. அவரைப் பார்த்த பலரும் எங்கள் வீட்டிலும் அதிகமாக பில் வந்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரிய பூதாகரமாக வளர்த்துவிட்டனர். அதன்பிறகு மின்சார வாரியம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை வெளியிட்டது.
அதிர்ந்த கார்த்திகா
மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது, பிரசன்னா வீட்டிற்கு எந்த அளவிற்கு ரீடிங் போடப்பட்டுள்ளது, அது எவ்வாறு கணக்கிடப்பட்டு அந்த தொகை வந்திருக்கிறது என்பதை தெளிவாக கூறி பதிலடி கொடுத்தது தமிழ்நாடு மின்சார வாரியம். இதனைப் பார்த்த பிரசன்னாவும் மின்சார வாரியத்தை நான் குறை கூறவில்லை, கட்டணம் அதிகமாக வருகிறது என்பதை மட்டுமே தெரிவித்துள்ளேன் என்பதை கூறியிருந்தார். பிரசன்னா வீட்டில் மின் கட்டணத் தொகை 70 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நடிகை கார்த்திகா நாயர் தன் வீட்டின் மின் கட்டணமும் அதிகமாக வந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருப்பதாகவும், ஊரடங்கு சமயத்தில் மீட்டர் ரீடிங் கணக்கு எடுக்காமலேயே தோராயமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளதாகவும் கார்த்திகா நாயர் புகார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது; “வித விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வந்துள்ளது. தோராயமான கணக்காக இதனை வசூல் செய்வதாக மும்பையில் இருக்கும் மற்ற பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்”. இவ்வாறு கார்த்திகா நாயர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அனைவரும் வீட்டில் இருக்கக்கூடிய இந்த தருணத்தில், மின் கட்டணம் அதிகமாக வருவது இயல்புதான். ஆனால் ஒரு லட்சம் என்பதெல்லாம் அதிகமாக இருக்கிறது என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சினிமாவில் வாய்ப்பில்லை
‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர், ‘கோ’ படத்திற்கு பிறகு தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார். சில வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர், தற்போது வாய்ப்புகள் குறைந்ததும் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நடிகை கார்த்திகா நாயர் 1990களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.