தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை பந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சுஷாந்தின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மனஅழுத்ததின் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படும் நிலையில், இது தற்கொலை அல்ல, கொலை என்று பாலிவுட் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடரும் சர்ச்சை
ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் உடல் அதேநாளில் பிரேத பரிசோதனைக்காக மும்பையின் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, தந்தை மற்றும் சகோதரிகள், அவரது நெருங்கிய நண்பர்கள், வீட்டு உதவியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களின் அறிக்கைகளை பதிவு செய்தனர். சுஷாந்தின் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சேகர் சுமன் #justiceforSushantforum என்ற மன்றத்தை உருவாக்கியுள்ளார். மேலும் டுவிட்டரில் #CBIEnquiryForSushant என்ற ஹேஷ்டேக்கும் ஒரு வாரத்திற்கும் மேலாக டிரெண்டாகி வருகிறது.
தற்கொலை தான்!
இதனிடையே, சுஷாந்த் சிங்கின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து மருத்துவர்கள் குழு கையெழுத்திட்டுள்ளது. தற்காலிக பிரேத பரிசோதனை அறிக்கையில் மூன்று மருத்துவர்கள் கையெழுத்திட்டனர். இறுதி அறிக்கையில் இரண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சுஷாந்தின் உடலில் “போராட்டம் அடைந்த நிலை அல்லது வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை” என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்டதால் இறப்புக்கான காரணம் மூச்சுத்திணறல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரது நகங்கள் சுத்தமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தற்கொலை தான் என ஊர்ஜிதமாவதாகவும், சுஷாந்த் தங்கியிருந்த குடியிருப்பு கட்டடத்தின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை போலீஸ் கடிதம்
இந்த வழக்கில் 23 பேரின் அறிக்கையை போலீசார் இதுவரை பதிவு செய்துள்ளனர். சுஷாந்த்தின் உடல் உள்ளுறுப்பு பாதுகாக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பகுப்பாய்வு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக மும்பை காவல்துறை தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.