நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து படம் இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குனர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
நயன்தாராவுக்கு நல்ல பெயர்
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தெலுங்கு, மலையாள திரையுலகிலும் முன்னணியில் இருந்து வருகிறார். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா, கோபி நயினார் இயக்கத்தில் உருவான ‘அறம்’ படத்தில் கலெக்டர் மதிவதனியாக நடித்து அசத்தினார். 2017ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படம் மூலம் நயன்தாராவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
கைமேல் பலன்
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் ஒரு கவுன்சிலர் நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளைக் குழாய், தண்ணீர் கிடைக்காத காரணத்தால் மூடப்படாமல் அப்படியே விடப்படுகிறது. அந்த ஆழமான குழியில் கூலி வேலை செய்யும் ராம்ஸ் – சுனுலட்சுமி தம்பதியரின் பெண் குழந்தை விழுந்து விடுகிறது. அந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியரான நயன்தாரா மீட்புக் குழு அமைத்து தீவிர நடவடிக்கையில் இறங்குகிறார். அந்தக் குழந்தையை காப்பாற்றுவதில் இருக்கும் அரசியல் குறுக்கீடு, சிக்கல்களை சந்தித்து குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது படத்தின் கதை. கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சமே வராத பூமி, பச்சைப் பசேல் எனக் காணப்படும் வயல்வெளிகள், எங்கு திரும்பினாலும் தென்னந் தோப்புகள், கடவுளின் சொந்த பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது ஆச்சரியமே. துணிச்சலுடன் இந்த கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்த நயன்தாராவுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
எந்த நடிகைக்கும் இடமில்லை
இந்த நிலையில், ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. நயன்தாரா நடிக்க மறுத்ததால்தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இதனை இயக்குநர் கோபி நயினார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ‘அறம் 2’ படத்தில் நடிக்குமாறு கீர்த்தி சுரேஷிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் ‘அறம் 2’ படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துவிட்டார்.