அவதூறுகளை பொருட்படுத்தாமல் சுஷாந்த்தின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
சுஷாந்த் மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மனஅழுத்ததின் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படும் நிலையில், இது தற்கொலை அல்ல, கொலை என்று பாலிவுட் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட சிலர் காரணம் எனக் கூறி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
குறையும் ரசிகர்கள்
இந்த குற்றச்சாட்டு காரணமாக சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி சின்ஹா ஆகியோரின் சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதேசமயம் இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு, இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடி வரும் நிலையில், அவருக்கு எதிராக சுஷாந்த்தின் ரசிகர்கள் போராட்டங்களையும் நடத்தினர்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
இந்த நிலையில், நடிகர் சல்மான்கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
பாலிவுட்டில் பரபரப்பு
சுஷாந்த் மரணம் தொடர்பாக சல்மான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சுஷாந்த்தின் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு தனது ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















































