ரஜினிக்கு அடுத்தபடியாக வசூல் வேட்டையில் தொடர்ந்து வெற்றி வாகைச் சூடி வருபவர் தளபதி ‘விஜய்’. இன்று அவரது 46வது பிறந்தநாள். கொரோனாவால் ஊர் உலகமே செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கும் இந்தச் சூழலில் ரசிகர்களிடம் ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மாஸ்டர் படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் நிலையில் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்யலாமே? என்ற ஆலோசனைகள் வந்தபொழுதும் நிதானமாக அவற்றைத் தவிர்த்துவிட்டார்.“எவ்வளவு நாள் ஆனாலும் சரி. திரையரங்குகளில்தான் என் படம் வெளியாகும். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பலதரப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இந்தப் பக்குவம் வெற்றி, தோல்வி என்ற தனிப்பட்ட அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சினிமா வர்த்தகத்தின் மீதும் அக்கரை உள்ள ஒருவரிடம்தான் இருக்க முடியும். ஊரடங்கெல்லாம் தளர்த்தப்பட்டு படம் எப்போது வெளியானாலும் அன்று ரசிகர்களுக்குத் திருவிழாதான். அதற்கு வெள்ளோட்டம்தான் நடிகர் விஜயின் திரைப் பயணத்தைப் பற்றிய இந்தக் குட்டி ஸ்டோரி.
காந்த் எனும் காந்த சக்தி
உங்கள் ஊரில் தேர்த் திருவிழாவிற்கு சென்ற அனுபவம் உண்டா? ஆயிரம் பேர் வடம் பிடித்து இழுக்கும் தேரை முதலில் நிலையிலிருந்து கிளப்ப ஒரு ஜெசிபியோ அல்லது மோட்டாரையொ வைத்து சின்னதாக ஒரு தள்ளு தள்ளுவார்கள். அப்படித்த் தான் திரைத் துறையில் முதல் வாய்ப்பு என்பதும். சிவாஜி ராவ் முதல் பக்கிரிவரை திரைத்துறையில் எத்தனையோ நடிகர்களைக் காந்த் என்ற டெம்ப்ளேட்டைப் பலர் கையில் எடுத்தார்கள். உபயம் கே.பாலச்சந்தர். ஆனால் நளினிகாந்த்,சூரியகாந்த், விஜயகாந்த் என்று எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து நிற்பது ரஜினிகாந்த் எனும் ஆளுமை. தன் கர்த்தாக்களின் கைப்பாவையாய் இல்லாமல் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி. அதே வழியில் இன்று ஜோசஃப் விஜய்.
முகவரி – முதல் வெற்றி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி, ஆரம்பத்தில் கதாநாயகனாக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து படத்தின் நடுவில் ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்’ என்று ஸ்லைடு போட்டி சின்னச்சின்ன நகாசு வேளைகளையெல்லாம் செய்தவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. சரி பையனுக்கு ஆட வரும், பாட வரும், கோயம்புத்தூர் குசும்பு இரத்தத்திலேயே கலந்திருக்கிறது என்பதை செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு போன்ற படங்கள் மூலம் மக்கள் பதிய வைத்துவிட்டார் எஸ்ஏசி. ஆனால் அப்பாவின் அரவணைப்பு இல்லாமல் நடிப்பு வருமா? என்பதுதான் திரைத் துறையில் இருந்தவர்களின் கேள்வி.
நடிப்புக்கு மரியாதை
”தாகத்தில் இருப்பவன் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை.நதியும் தாகத்தில் தகித்துக்கொண்டிருப்பவனைத்தான் தேடி ஓடுகிறது”என்ற ஜலாலுதின் ரூமியின் பொன்மொழி விஜயின் திரைப் பயணத்திற்கும் கச்சிதமாகப் பொருத்தும்.விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டிய முரளி ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது என்று முடிவாக அந்த வாய்ப்பு விஜய்க்கு வந்தது. துள்ளலான இளமை ததும்பும் காதல் காட்சிகளில் நடித்தவர் ‘இதயம்’ முரளியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு அசாதரரமான தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். பூவே உனக்காக வெற்றி அந்த தன்னம்பிக்கைக்கு கிடைத்த பரிசு.அதைத் தொடர்ந்து ஆக்ஷன், காதல், நகைச்சுவை என்று கலந்துகட்டி அடித்தாலும் இடையிடையில், ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற வாய்ப்புகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் விஜய்.
’மாஸ்’டர் ஸ்ட்ரோக்
எல்லாம் துறையிலும் நடுக்கடலையெட்டிய நிலையில இருக்கும் ஒரு அமைதி பலவிதக் கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பும். மக்களின் பல்ஸ் தெரிந்து நடிக்கும் கலை கைவந்தாகிவிட்டது. ஆனால் முழுக்க முழுக்க ஆக்ஷன் மசாலாவில் ஜான் ஏறினால் முழம் சறுக்கியது. பத்ரி வெற்றி என்றால் புதிய கீதை அட்டர் ஃப்ளாப். பஞ்ச் வசனங்கள் பேசினால் அது காமெடியாக பாவிக்கப்பட்டன. ஆக தன்னுடைய பலங்களான நகைச்சுவை , நடனம், செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் ஒரு பேக்கேஜாகக் கொடுக்கும் திரைக்கதை வேண்டும் என்பது பிடிபட்டது.
நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு
”அஜித்தைப்போல் சால்ட் அண்ட் பெப்பரில் நடிக்கவில்லை”, ”விக்ரமைப்போல், சூர்யாவைப்போல் தோற்றத்தில் வேறுபாடுகள் காட்டவில்லை”, ”மகேஷ்பாபு நடித்த படங்களை நோகாமல் ரீமேக் செய்கிறார்”, ” சுறா போன்ற படங்களில் லாஜிக்கே இல்லாத காட்சிகளைக் கேள்வி கேட்காமல் நடிக்கிறார்”, ”சேரன் முதல் கௌதம் மேனன் வரை பலர் படங்களை தன் பாணிக்கு மாற்றியமைக்கும்படி திருப்பியனுப்பிவிட்டார்” இப்படிப் பலவிதமான குறைகள், குற்றச்சாட்டுகள் எதற்கும் செவிமடுக்காமல் தமிழ்நாட்டையும் தாண்டி கேரளத்திலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே கட்டமைத்திருக்கிறார் விஜய். முதல்வன் 2 இல் ஷங்கருடன் மீண்டும் இணைகிறார் என்று பேசப்படுகிறது. ரஜினிக்காக எழுதப்பட கதை. அதில் விஜய் நடிக்கும்பட்சத்தில் அவரது நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே அர்த்தம்.
அவருடைய வார்த்தைகளிலேயே இதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால்“என்னுடைய முதல் படம் நாளைய தீர்ப்புல நடிச்சேன். ஆனா அந்தப் படம் என்னக் கைவிட்ருச்சு.கெடச்ச ட்ரெயின்ல ஏறி நினைச்ச இடத்துக்குப் போக முடியாது. நமக்கான டிரெயின் வரனும்னா நாம கொஞ்ச நேரம் பிளாட்ஃபாரத்துல நின்னுதான் ஆகனும். லைஃப்ல முன்னுக்கு வர்றதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனா என்ன அந்த வாய்ப்புகள்ல இருக்குற கஷ்டத்தப் பாக்குறவங்க தோத்திட்றாங்க. அந்தக் கஷ்டத்திலையும் இருக்க வாய்ப்பப் பாக்குறவங்க ஜெயிக்குறாங்க.நமக்குப் பின்னாடி பேசறவங்க பத்தியெல்லாம் நாம கவலையே படக்கூடாதுங்க..அவங்களோட நாம 2 அடி முன்னாடி இருக்கோம்ங்கறத நினைச்சு பெருமப்பட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியத்தான். நிறையபேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் ஒருத்தரோட வெற்றிக்குப் பின்னாடி ஒரு ஆனோ இல்ல பெண்ணோ இருப்பாங்கன்னு. ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னாடி அவமானங்கள்தான் இருந்திருக்கு.2 things will define youன்னு சொல்லுவாங்க.One is Your determination when you have nothing. Your attitude when you have everything.எப்பவுமே அடுத்தவங்க தொட்ட உயரத்த உங்களோட இலக்கா வெச்சுக்காதீங்க. நீங்க தொட்ட உயரத்த அடுத்தவங்களுக்கு இலக்காக்குங்க”
மாபெரும் சபைதனில்
ஃபாதர்ஸ் டே க்கு அடுத்த நாளே பிறந்த நாள் கொண்டாடும் விஜய் சாதிக்கத் துடிக்கும் எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன். இன்றைக்கும் மகனுடைய புதுப்பட விழாக்களில் முதல் வரிசையில் உட்கார்ந்து அழகுபார்க்கிறார் எஸ்ஏசி. அவருடைய மகன் விஜய் என்ற அடையாளத்தைத் தாண்டி விஜயின் அப்பா எஸ்ஏசி என்ற உயரத்தை அவர் எட்டியிருக்கார். அடுத்து விஜயோட மகன் நடிக்க வர்றாருன்னு செய்திகள் வெளியாகுது. மகன்கிட்டத் தோற்குறதைவிட ஒரு அப்பாவுக்குப் பெருமிதம் வேற என்ன இருக்க முடியும் சொல்லுங்க!