தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், மேலும் நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ந் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
கட்டுப்பாடு
ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிற இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட விரும்புபவர்கள், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கே உணவை வரவழைத்து வாங்கிக்கொள்ளலாம். உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டையை பெற்று வைத்திருக்க வேண்டும்.
எந்த தளர்வும் இல்லை
ஊரடங்கு காலத்தில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராததால், சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கையொட்டி சென்னை நகரம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டடுள்ளது. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரும் நபர்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் நகரில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. ஊரடங்கின்போது அரசு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றிவரும் வாகன ஓட்டிகளின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
4 மாவட்டங்களில் ஊரடங்கு?
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.