இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
விஜய் பிறந்தநாள்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் விஜய். தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் பிறந்த நாளையொட்டி சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதனைக் கொண்டாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாகவே விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத அவரது ரசிகர்கள் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
‘லவ் யூ’ அண்ணா
விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; “கண்டிப்பாக மாஸ்டர் ஒரு மறக்க முடியாத நினைவுதான். அதில் ஒரு நாளை மட்டும் என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது. அதை நினைத்து சந்தோஷப்படுவேன் அண்ணா. இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ” என குறிப்பிட்டுள்ளார்.
நீங்க இல்லாம நான் இல்ல
இதேபோல் சமூக வலைதளத்தில் இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ள வாழ்த்திச் செய்தியில்; “என்னோட அண்ணா, என்னோட தளபதி. என்னைவிட உங்களைதான் நான் அதிகமாக நேசிக்கிறேன். உங்களை மதிக்கிறேன். உங்களுக்கு நிறைய கடமைபட்டிருக்கிறேன். நீங்க இல்லாம நான் இல்லை. லவ் யூ அண்ணா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா”. என குறிப்பிட்டுள்ளார். அதோடு பிகில் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அட்லீ பகிர்ந்துள்ளார். விஜய்யின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.
‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், விஜே ரம்யா, ஸ்ரீமன், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம், கொரோனா அச்சுறுத்தல் தணிந்து இயல்புநிலை திரும்பிய பின் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.