இந்தியாவில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இது சுமார் 6 மணிநேரம் வரை நீடிக்கிறது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது.
சூரிய கிரகணம்
கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெறுகிறது.
வெறும் கண்களால் பார்க்கக்கூடாது
சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிக பிரகாசமாக இருக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் காணக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காலை 9.15 மணிக்கு கிரகணம் தொடங்கிய நிலையில், இந்தியாவில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணிக்கு சூரிய கிரகணம் முதலில் தென்பட்டது. இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகாரில் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைகிறது.
முதல் கிரகணம்
இது இந்த ஆண்டின் முதல் கிரகணம் ஆகும். அடுத்த கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதான் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாகும். அது போல் இந்தியாவில் தென்படும் கடைசி கிரகணம் இதுவாகும். இத்துடன் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்தியாவில் கிரகணம் தெரியும் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.