ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வியலைத் தன் திரைமொழியின் மூலம் ஒரு பட்டுப் பூச்சியின் கடைசி முத்தத்தைப்போல் அழுத்தமாகப் பதிவு செய்பவர் பி.சி. ஒவ்வொரு ஃபிரேமிலும் புதுமையைப் புகுத்த நினைப்பவர். மாற்றங்களையும் புதிய முயற்சிகளையும் எப்போதும் ஆதரிக்கும் பி.சி. லாக்டவுன் ஓய்வுக்குப் பிறகு ஒப்பந்தமாகும் முதல் பிராஜக்ட் ஒரு வெப் சீரீஸ். நிச்சயம் இது ஓடிடியில் வெளியாகும் படங்கள், தொடர்களின் தரத்தை உயர்த்தும்.
மணிரத்னம் எனும் மந்திரவாதி
மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டிருந்தவரை ’வா இந்தப் பக்கம்’ என்ற படத்திற்காக இயக்குநர் மௌலி அழைத்ததும் வந்துவிட்டார்.தொடர்ந்து அவருடன் மூன்று படங்கள். பின் பிரதாப் போத்தன், ஃபாசில் போன்ற இயக்குநர்களுடன் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் கமல், சந்தானபாரதி உள்ளிட்ட தன் சாம்கோ நண்பர்கள் வழியாக மணிரத்னத்தை வந்தடைகிறார்.
பி.சி.சர்கார் கையில் கிடைத்த மந்திரக்கோலாகவே மாறிப்போனார் மணிரத்ணத்துடன் இணைந்த பி.சி.ஸ்ரீராம். மௌன ராகம் தொடங்கி ஓ…காதல் கண்மணிவரை பல கல்ட் க்ளாசிக்களை இருவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள். நாயகனுக்கு தேசிய விருது கிடைத்தது. மனோ பாலா தொடங்கி மிஸ்கின் வரை பல இயக்குநர்களுடன் இடையிடையே ஒரு படம் செய்துவிட்டு மீண்டும் மணி.மீண்டும் மேஜிக். ஷங்கருடன் அவர் பணியாற்றிய ஒரே படம் ‘ஐ’.
கமலின் கடைக்கண்
விக்ரமின் மீரா படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த பி.சியை கமலஹாசன் ஒரு ரீமேக் படத்தை இயக்க அழைத்தார். தேசிய விருதுகள் வாங்கிய பல வெற்றிப் படங்களின் இயக்குநர் கோவிந்த் நிஹாலணியின் ‘த்ரோஹ் கால்’தான் இன்றும் நம்மால் பேசப்படும் குருதிப்புனலாக இவர்கள் கூட்டணியில் பரிணமித்தது.
கௌதம் மேனனுடன் முதல் முறை
எம்.எக்ஸ் பிளேயருக்காக ’குவீன்’ தொடரை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கௌதம் மேனனுடன் இணைந்து இயக்கியவர் பிரஷாந்த் முருகேசன். இப்போது அவருடைய இயக்கத்தில் ‘மதக்கம்’ என்ற புதிய வலை தொடர் அமேசான் பிரைமிற்காக ஒப்பந்தமாகியுள்ளது. குவீனில் கௌரவ வேடமேற்று நடித்த ஜிவிஎம் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதின் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாதியில் நிற்கும் ‘ரங் தே’ படத்தை முடித்ததும் ‘மதக்கம்’ குழுவுடன் பி.சி இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கேங்க்ஸ்டர்களும்- போலிசும் மோதிக்கொள்ளும் க்ரைம் டிராமா வகையறா கதைகளில் இரண்டுபேருமே பின்னிப் பெடலெடுக்கக் கூடியவர்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம்.