‘கும்கி’ படத்தில் நடித்த இளம் நகைச்சுவை நடிகர் அஸ்வினுக்கு பட்டதாரி பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
நகைச்சுவை நடிகர்
தயாரிப்பாளர் சாமிநாதனின் மகனான அஸ்வின், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு வந்தான் வென்றான், கும்கி, தில்லுமுல்லு, நையாண்டி, நெடுஞ்சாலை, கணிதன், அச்சமின்றி உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கும்கி திரைப்படத்தில் பெரிய கேரக்டரில் நடித்ததால் தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்துக் கொண்டார் அஸ்வின்.
காதலியுடன் திருமணம்
அஸ்வினும் அமெரிக்காவில் படித்த வித்யாஸ் என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண நிச்சயதார்த்த விழா எளிமையான முறையில் நடந்தது. அதுபோலவே வருகிற 24ந் தேதி அஸ்வின் வீட்டில் திருமணமும் எளிமையாக நடக்கிறது.
அப்பா தான் பெஸ்ட்
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில்; பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நடிப்பின் மீது தீராத ஆசை இருந்தது. ஆனால் என்னுடைய அம்மா அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். நடிக்கவே கூடாது என்று கூறிவந்தார். ஆனால் அப்பா பள்ளிக்கு கூட்டிட்டு போவதாக கூறிவிட்டு அம்மாவுக்கு தெரியாமல் ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு அழைத்துச் சென்று விடுவார். எனக்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே அப்பாவின் சப்போர்ட் ரொம்பவே அதிகம்.
சினிமா கனவு
என்னுடைய சினிமா கனவு முழுக்க முழுக்க அப்பாவால் நிறைவேறியது. பல போராட்டத்திற்குப் பிறகுதான் நான் சினிமாவில் நுழைந்தேன். அதற்கு என்னுடைய அப்பாதான் முழுக்க முழுக்க காரணம். அப்படித்தான் “பாஸ் என்கிற பாஸ்கரன்” பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரைத்துறையில் இருக்கும் எல்லா அப்பாக்களுக்கும் ஒரு கனவு இருக்கும். தன்னுடைய மகன் அல்லது மகளை சினிமாவில் நடிக்க வைத்து அழகு பார்ப்பது. அப்படித்தான் என்னுடைய அப்பாவும். நான் நடித்த ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தை பார்த்துவிட்டு அவர் தியேட்டரிலேயே துள்ளிக் குதித்தார்.