தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அச்சுறுத்தும் கொரோனா
சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் காட்டி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய – மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிகரிக்கும் பாதிப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ கடந்துள்ளது. புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரும் என மொத்தம் 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு 625 ஆக உயர்ந்துள்ளது.
கமல் வேண்டுகோள்
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்; வெளிப்படையின்றி செயல்பட்டதால்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.