கோகுல் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு ‘கொரோனா குமார்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிளாக் பஸ்டர் படம்
‘ரௌத்திரம்’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநாராக அறிமுகமானவர் கோகுல். அதனைதொடர்ந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கினார். விஜய்சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர்.
‘கொரோனா குமார்’
கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்திற்கு ‘கொரோனா குமார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார். அவ்வாறு அந்தக் கதாபாத்திரம் ஒரு விஷயத்தைத் திட்டமிடும்போது, கொரோனா லாக்டவுன் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்களை, காமெடியாக ‘கொரோனா குமார்’ படத்தில் சொல்லவுள்ளார்கள். ஒட்டுமொத்தப் படமும் ஊரடங்கு மற்றும் தனிமைக் காலங்களில் நடைபெறுகிறது.
விஜய்சேதுபதி அறிவிப்பு
இதுதொடர்பாக விஜய்சேதுபதி வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் கோகுல் ‘கொரோனா குமார்’ என்ற டைட்டிலில் படத்திற்குத் திரைக்கதை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபிறகு இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஷூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2-ம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.