எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் படுகாயமடைந்த 4 இந்திய வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், சீன கமாண்டர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. லடாக் எல்லையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் இருதரப்பு படைகளுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீன தரப்பிலும் பாதிப்பு?
இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே மரணங்களுக்குக் காரணம் என்றும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பதற்றத்தை தணிக்க இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அவசர ஆலோசனை
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “லடாக் நிலவரம் குறித்து, இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6ல் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இரு தரப்பும் சுமூகமாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.” பிரச்சனை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்தது. இதனால், இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சூழல் உண்டானது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேசமயம் இந்திய இறையாண்மையை பேணிப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” இவ்வாறு அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
கவலைக்கிடம்
இதனிடையே, இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், கமாண்டர் நிலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.