சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமா போஸ்ட் புரோடெக்சஷன் பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா
உலகப்பேரிடர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்து நாடுகளிலும் கட்டுக்குள் அடங்கா உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நோய்ப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கைப் பிறப்பித்தன. சுகாதாரம், காவல், அரசு நிர்வாகம் உள்ளிட்ட சில துறைகள் தவிர, சினிமா முதலிய துறைகள் முடக்கத்திற்குள்ளாயின. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
போஸ்ட் புரொடக்சன்
மார்ச் மாதம் 24ந் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கு முன்னதாகவே மார்ச் 19 ந் தேதி முதற்கொண்டு சினிமா மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் நடிகர், நடிகையர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. மார்ச் 25 முதல் மே 31 வரை 4 கட்டங்களாக முழு ஊரடங்கு நீடித்த நிலையில், ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நடத்திக்கொள்வதற்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது.
சின்னத்திரை படப்பிடிப்பு
ஊரடங்கில் சில தளர்வுகளைத் தந்த அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் நலன் கருதி, சின்னத்திரை டிவி தொடர்களின் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. 60 கலைஞர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்ற உத்தரவு ஆறுதலாக இருந்தாலும், பல தொழிலாளர்களுக்கும், டிவி தொடர் தயாரிப்பாளர்கள் சிலருக்கும் இது முழு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
மீண்டும் முழு ஊரடங்கு
கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று நிம்மதி அடைந்த சின்னத்திரை நடிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தலையில் மீண்டும் இடிவிழுந்தது போலொரு நிலை இப்போது உருவாகி உள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு. வரும் 19ந் தேதி முதல் 30ந் தேதி வரை அவ்வூரடங்கு நீடிக்கும் எனவும், முதற்கட்ட ஊரடங்கில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் யாவும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் நிறுத்தம்
4 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவுற்றதற்குப் பிறகு நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் மட்டும் தங்களுக்கான டிவி தொடர் படப்பிடிப்புகளைத் தொடங்கி முடுக்கி விட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் அந்தப் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.