இனி வரும் காலம் சினிமாவுக்கு சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
OTTயில் ரிலீஸ்
சர்கார் படத்திற்கு பிறகு சுமார் இரண்டு வருட கால இடைவெளிக்குப் பின் பென்குயின் படத்தில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் வருகிற 19ந் தேதி OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது. பொன்மகள் வந்தாள் படத்திற்கு OTTயில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் விரும்பும் கதைகள்
இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; இரண்டு வருடம் கழித்து எனது படம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாநடி படத்திற்கு கிடைத்த தேசிய விருது எனது பொறுப்பை அதிகரித்தது. அதனால் நல்ல கதைகளை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
வேறு வழியில்லை
20 கதைகள் வரை நிராகரித்த பின் தான் பென்குயின் அமைந்தது. 35 நாளில் படத்தை முடித்து ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பிரச்சனை வந்துவிட்டது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே தனி தான். ஆனால் என்ன செய்வது சூழ்நிலை இப்படி இருக்கிறதே. அதற்கேற்றார் போல் நாமும் மாறித்தான் ஆக வேண்டும். உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம் என்ற வசதி OTTயில் உள்ளது. ஆனால் அங்கும் பைரசி வந்துவிட்டது.
சம்பளம் குறைப்பு
இனிவரும் காலம் சினிமாவுக்கு சிக்கலாகத் தான் இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வரவேண்டும். நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். எனது படங்களுக்கு நான் வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைத்துக் கொள்வேன். இதனை சினிமாவில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.