கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏழை மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குகூட மக்கள் பெருமளவில் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலம் நுவாபாடா மாவட்டத்தில் அமைந்துள்ள பார்கான் கிராமத்தில் வசிக்கும் 100 வயதான மூதாட்டியின் வங்கிக் கணக்கில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான நிவாரண தொகை ரூ. 1500 செலுத்தியது. இதனை பெறுவதற்காக நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கும் தாயை, அவரது மகள் கட்டிலில் வைத்தபடி வங்கிக்கு இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.















































