கொரோனா அச்சம் காரணமாக மும்பையில் உள்ள வீட்டை காலி செய்த நடிகை ஸ்ருதிஹாசன் ஹைதராபாத்தில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மும்பையில் செட்டில்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் குடியேறினார். அங்கிருந்தேபடியே படங்களிலும் நடித்து வந்தார். தமிழ் படங்களில் நடிப்பதற்காக அவ்வப்போது சென்னை வரும் ஸ்ருதி, படபிடிப்பு முடிந்ததும் மீண்டும் மும்பை பறந்துவிடுவார். 
கொரோனா அச்சம்
இந்நிலையில், தற்போது மும்பையில் கொரோனா பரவல் அதிரித்து காணப்படுகிறது. மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தினமும் ஏராளமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக மும்பையில் உள்ள பிரபலங்கள் பலர் அங்கு வசிக்க அச்சப்படுகின்றனர். நடிகர், நடிகைகள் மும்பையை காலி செய்துவிட்டு, நகருக்கு வெளியே உள்ள பண்ணை வீடுகளில் குடியேறியுள்ளனர். நடிகர் சல்மான்கானும் பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த வரிசையில் கொரோனா அச்சம் காரணமாக நடிகை ஸ்ருதிஹாசனும் மும்பையில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் குடியேற்றம்
மும்பையில் இருந்து அவர் சென்னை வர முடிவு செய்ததாகவும், ஆனால் சென்னையிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாவதால் ஐதராபாத்துக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதேசமயம் ஆந்திரா, தெலுங்கானா மாநிங்களில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்து இருப்பதால், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஸ்ருதிகாசன் ஐதராபாத் சென்று இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.













































