அசைவ உணவிற்கு நிகராக உடலை வலுவாக்கும் பயறு வகைகளில் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. நமது பாரம்பரியமான பயறு வகைகளில் அடங்கியுள்ள சத்துக்களில், மிக அதிகளவில் புரதச்சத்து நிறைந்துள்ளன. அசைவு உணவிற்கு இணையான இப்பருப்பு வகைகளை சாப்பிடுவதால், உடல்திறனும் ஆற்றலும் மேம்படுகிறது.
ஏழைகளின் இறைச்சி
ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படும் பயறு வகைகளில், அனைத்து விதமான சத்துக்களும் நிரம்பி உள்ளன. அதிலும் முளைகட்டிய பயறு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. அசைவ உணவிற்கு இணையான இந்த முளைகட்டிய பருப்பு வகைகளில், சுமார் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. முளைகட்டிய பயறு வகைகளில் இருமடங்கு ஆற்றலும் சக்தியும் உள்ளன.
சத்துகள்
முளைகட்டிய பயறு வகைகளை வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ உட்கொள்ளலாம். முளைகட்டிய பயறு வகைகளில், புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டின் போன்ற பல்வகைச்சத்துகள் மிகுதியாக இருக்கின்றன. மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்களும் நார்ச்சத்தும் கிடைக்கின்றன. முளைகட்டிய பயறு வகைகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்டும், நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கின்றது. மேலும் பொட்டாசியம், கலோரி, பாஸ்பரஸ், பாலிக் ஆசிட் ஆகியவை அதிகளவில் உள்ளன. குறிப்பாக பசுசைப்பயறு மற்றும் தட்டைப்பயிறுகளில் மிகுதியான புரதச்சத்துகளும் நிரம்பி உள்ளன. இப்பயறு வகைகளில் அப்படியே உட்கொள்வதைவிட முளைகட்டிய முறையில் சாப்பிடலாம்.
சாப்பிடும் முறை
ஒரு குறிப்பிட்ட பயறுவகையை 100 கிராம் எடுத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் இட்டு, நீரில் ஊற வைக்கவேண்டும். 10 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். நீரில் ஊறிய பயறை எடுத்து சுத்தமான காட்டன் துணியில் வைத்துக்கட்ட வேண்டும். அதற்குப்பின் 12 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் பயறு முழுதுமாக முளைத்திருக்கும். இவ்வாறு முளைகட்டுவதற்கு என்று பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வெந்தயம் மற்றும் கேழ்வரகு போன்ற பயறு வகைகளைப் பயன்படுத்தலாம். ஒரே பயறு வகையை எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு நாளும் வேறு வேறு பயறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பயறு வகைகளை சாப்பிடும்போதும், காலை உணவாக எடுத்துக்கொள்ளும்போதும் 50 முதல் 65 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் 70 முதல் 80 கிராம் அளவுக்கு உட்கொள்ள வேண்டும். இரவு உணவாக உண்ணும்போது 70 கிராம் முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.
நிவாரணி
ஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் முளைகட்டிய தானியங்களை குறைவான அளவில் எடுத்துக்கொண்டால் நலம்பயக்கும். இவ்வாறு பயறுவகைகளை உண்ணும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதைத்தவிர்க்க முளைகட்டிய பயறு வகைகளை, வெந்நீரில் மிதமாக வேக வைத்துச்சாப்பிட வேண்டும். பயறு வகைகளில் நார்ச்சத்து அதிகளவு இருப்பதால், உண்டபின் தண்ணீர் நிரம்பக்குடிக்க வேண்டும்.