வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகை அஞ்சலி நாயர் தனது செல்லக் குழந்தையை தொடகூட முடியாததால் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
உலுக்கிய கொரோனா
உலக மக்களின் அடித்தளத்தைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், வலியவர், எளியவர் என்பன போன்ற பாகுபாடுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ஒய்யாரமாகத் தலைவிரித்தாடுகிறது. மக்களின் வாழ்க்கையில் கொரோனாவுக்கு முன்பு, கொரோனாவுக்குப் பின்பு என்ற நாட்குறிப்பை திணித்துள்ளது இந்த வைரஸ். புயல், பூகம்பம், வெள்ளம் இவற்றையெல்லாம் தாண்டி, புளிய மரத்தில் பழங்களை உலுக்குவதுபோல, உலகில் லட்சக்கணக்கான உயிர்களை உலுக்கி விழுங்கிய இரக்கமற்ற அசுரனாகிவிட்டது கொரோனா.
ஊரடங்கு
நோய்ப் பரவலைத்தடுக்க பல வழிகளை மேற்கொண்ட அரசு, இறுதியில் ஊரடங்கு அறிவித்தது. இதனால் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த சினிமா உலக பிரபலங்களின் வாழ்க்கை முறையும் கேள்விக்குறியானது. படப்பிடிப்புகளுக்காக பல்வேறு நாடுகளுக்குக் குழுவாகச் சென்ற பல நடிகர், நடிகைகள் தாயகத்திற்கு திரும்ப இயலாத நெருக்கடியில் சிக்கிக்கொண்டனர்.
பாலைவனத்தில் பிருத்விராஜ்
‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்ற நடிகர் பிருத்விராஜ், ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் அங்குள்ள பாலைவனப் பகுதியில் சில நாட்கள் அவதிப்பட்டார். பின்னர் தாயகம் திரும்பிய பிருத்விராஜ், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தனிமைப்படுத்துதல் முடிந்து அவருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்ட போது, நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது. அதன்பிறகே அவர்தம் மனைவி மக்களைச் சந்தித்துப்பேச முடிந்தது.
தனிமையில் நடிகை
நடிகர் பிருத்விராஜைப் போலவே இன்னொரு மலையாள நடிகையும் ஊரடங்கில் சிக்கித் திரும்பி இருக்கிறார். படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் இப்போது தனிமைப்டுத்தப்பட்டுள்ளார். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ‘டிஜிபுட்டி’ படப்பிடிப்புக்காக, அஞ்சலி நாயர் உள்ளிட்ட 70 பேர் கொண்ட படக்குழுவினர் ஆப்பிரிக்கா சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவர்களால் திரும்பிவர முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இப்போது சிறப்பு விமானம் மூலம் கேரளா திரும்பியுள்ள நடிகை அஞ்சலி நாயர் உள்ளிட்ட 70 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏங்கும் தாய்மை
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்து நடிகை அஞ்சலி நாயர் கூறும்போது, “படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருந்த நான் ஊர் திரும்ப முடியாமல் 2 மாதங்கள் தவித்தேன். இப்போது ஊருக்கு வந்த பிறகும் எனது மகளைத் தொட முடியாமலும், அவளைக் கட்டியணைக்க முடியாமலும் தவிக்கிறேன். மூடப்பட்ட அறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தவிக்கிறேன்” என்றார். இப்படி பாசத்தால் ஏங்கும் ஒரு தாய்மையின் உள்ளக்குமுறல் ரசிகர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.