இந்து சமயத்தில் திருக்கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான வழிபாட்டு முறைகள், செய்யக்கூடியவை, கூடாதவை குறித்தும் பற்பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

பெண்கள் வழிபாடு

கோயில் வழிபாட்டில் ஈடுபடும் பெண்கள், பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, அவர்கள் தம் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்குக் குளித்தபின் தலைமுடியின் பின் நுனியை விரித்துப்போட்டுக்கொண்டு சுற்றுவது கூடாது.

வலம் வருவாய் மனமே

ஒவ்வொரு கோயில் பிரகாரத்தையும் குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லதாகும். பொதுவாக கோயிலைச் சுற்றும்போது, ஒவ்வொரு தெய்வத்திற்கும் என ஒரு முறை இருக்கிறது. வினைதீர்க்கும் விநாயகருக்கு ஒரேயொரு முறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனுக்கு 4 முறை வலம் வரவேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும், இராமதூதன் அனுமனை 11 முறையும் சுற்றிவருதல் நற்பலன்களைத் தரும்.

கோபுர தரிசனம்

கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்லும் முன்பு, அங்கேயே சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு, பின் எழுந்து செல்வது நலமாகும். அப்போது கோயில் கோபுர தரிசனம் செய்வதும் மிகச்சிறப்பாகும். கோபுர தரிசனம் கோடி பாவங்களைப்போக்கி விமோசனம் தரக்கூடியது. அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியோர்கள் கூறினர்.

அதிசய அரச மரம்

திருக்கோயில்களில் உள்ள அரச மரங்களை வலம் வருவது பல்வகையிலும் நலன்தரும். குறிப்பாக கோயிலில் உள்ள அரச மரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே தொட்டு வணங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு காலைப்பொழுதிலும் அரச மரத்தை வலம்வருவது உகந்ததாகும். பிற்பகல், மாலை நேரங்களில் அரச மரத்தை வலம் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அங்கப்பிரதட்சணம்

திருக்கோயில் வழிபாட்டில் அங்கப்பிரதட்சணம் என்பது குறிப்பிடத்தக்க நிவர்த்திக்கடனாகும். இதற்காக வேண்டிக்கொண்டவர்கள் கோயிலைச்சுற்றி உருண்டு வலம் வருவது வழக்கம். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வேலையை, காலை வேளையிலேயே செய்வது கைமேல் பலனாகும்.

நல்லெண்ணம்

அனைத்திற்கும் மேலாக இறைவழிபாட்டில் ஈடுபடுவோர் கோயில் வளாகத்திற்குள்ளும், வெளியேயும், தீமை பயக்கும் சொற்களைக் கூறுவதோ, சிந்திப்பதோ கூடாது. மனதிலும், வாக்கிலும் எப்போதும் நல்லெண்ணம் எனும் தீபமேந்தி, மன அமைதியுடன் வழிபாடு செய்வதே உண்மையான வழிபாடு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here