நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், என்னது எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த நடிகை
பப்லி லுக், கியூட் எக்ஸ்பிரஷன்கள் என தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் மும்பையை சேர்ந்தவர் என்றாலும், தென்னிந்திய படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். தற்போது மஹா, பார்ட்னர் ஆகிய தமிழ் படங்களை ஹன்சிகா கைவசம் வைத்திருக்கிறார். மஹா படம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அந்தப் படத்தில் சிம்பு ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
உடல் எடையில் கவனம்
கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகை ஹன்சிகா வீட்டிலேயே முடங்கியுள்ளார். வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் ஓவியம் வரைவது, சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்வது என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போவது தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஹன்சிகாவுக்கு அழகே அவர் புஸு புஸுவென இருப்பதுதான். வெயிட் போட்டு பழையபடி கொழு கொழுவென ஆகுங்கள் என்று ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹன்சிகா ஒல்லியாகிவிட்டதால்தான் அவரின் மார்க்கெட் அடிவாங்கியதாகவும் ரசிகர்கள் நினைக்கின்றனர்.
திருமணமா?
இந்நிலையில் ஹன்சிகாவுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்தி வெளியானது. இதனை அறிந்து கடுப்பான ஹன்சிகா, ‘ஓ மை காட் யார் அவர்’ என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். ஹன்சிகாவுக்கு திருமணம் என்கிற செய்தியை பார்த்த ஒருவர் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்க, ‘எனக்கே இப்போ தானே தெரியது’ என்று பதில் அளித்துள்ளார் ஹன்சிகா.
தொடரும் வதந்தி
லாக்டவுன் நேரத்தில் இப்படி சினிமா பிரபலம் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று செய்தி வெளியானது இது ஒன்றும் முதல் முறை அல்ல. நயன்தாராவுக்கும், அவரின் காதலரான விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் கோவிலில் வைத்து திருமணம் நடக்கப் போகிறது என்று தகவல் வெளியானது. அதன்பிறகு சிம்புவுக்கும், லண்டனை சேர்ந்த அவரின் தூரத்து சொந்தக்கார பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்த பிறகு திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி. ராஜேந்தர் அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.