மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது.
கோயில்கள் திறப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் அடைக்கப்பட்டிருந்த கோவில்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில், குருவாயூர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
கட்டுப்பாடு
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கை கழுவ வாசலில் தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்ட பின், கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நேரத்தில் 10 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பிரசாத விநியோகம் நடைபெறவில்லை.
ஜூன் 14ல் நடை திறப்பு
இதனிடையே, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை ஜூன் 14ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சன்னிதானத்தில் ஒரு நேரத்தில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் தரிசனம் உண்டு.
சான்றிதழ் அவசியம்
10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்திற்கு கேரள போலீசாரின் இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். வெளிமாநில பக்தர்கள், கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேரளா செல்வதற்கான இ-பாஸ் பெற வேண்டும். ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, வரும் 28ந் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும்.