கேளிக்கை வரி சதவிகிதத்தை முழுவதுமாக ரத்து செய்தால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும்போது டிக்கெட் விலை குறைக்கப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரத்யேக பேட்டி
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் என்ன மாதிரியான சாதக, பாதகங்கள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் லிட்டில் டாக்ஸ் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
பெரும் நஷ்டம்
அவர் பேசுகையில்; “கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட 26 சதவீத வரியை அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கு குறைக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக தியேட்டர்கள் மூடியிருக்கும் நிலையில், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், தியேட்டர் பராமரிப்பு கட்டணம், மின் கட்டணம் என நிறைய செலவுகள் ஏற்பட்டுள்ளது. சினிமா தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. எனவே, நஷ்டம் என்பதை கணக்கிட முடியாத அளவில் இருக்கிறது.”
ஆன்லைனில் மட்டுமே கட்டணம்
தியேட்டர்கள் திறக்கப்படும்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தியேட்டருக்குள் நுழையும் பொழுது சானிடைசர் கொடுக்கப்படும். திரையரங்குகளில் பணிபுரிபவர்கள் கட்டாயமாக கையுறை அணிந்திருப்பார்கள். டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஆன்லைன் புக்கிங் மட்டுமே எடுத்துக்கொள்ளும்படி வழிவகை செய்யப்படும். தவிர, கவுண்டரில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்கிற பட்சத்தில் கூகுள்-பே மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். திரையரங்குகளில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்படும். ஒரு காட்சி முடிந்தவுடன் கிருமிநாசினி கொண்டு தியேட்டர்கள் முறையாக சுத்தம் செய்யப்படும்.”
OTT பாதிப்பை ஏற்படுத்தும்
“OTT தளத்தில் முதலில் நிறைய சலுகைகள் கொடுப்பார்கள். அதன்பின் அவர்கள் கட்டணத்தை அதிகப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் மிகக் குறைவான விலைக்கு கட்டணம் செலுத்தும் நிலை இருந்தாலும், படங்கள் அதிகமாக ரிலீசாக ரிலீசாக கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். இல்லையேல், புதிதாக ரிலீஸாகும் படங்கள் கட்டணம் கட்டாதவர்களுக்குத் தெரியாது என்று அறிவிப்பார்கள். OTT தளம் முதலில் நமக்கு சாதகமாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல நமக்கு பாதகமாகவே அமையும்.”
சாத்தியமில்லை
ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் தொழிலில் ஸ்நாக்ஸ் கட்டணம் குறைப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. ஸ்நாக்ஸ் கட்டணத்தை குறைவாகக் கொடுக்கும் தனித் தியேட்டர்கள் நிறைய இருக்கின்றன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் செலவினங்கள் அதிகமாக இருப்பதனால் அதிக விலையை பார்வையாளர்கள் கொடுத்தாக வேண்டியது இருக்கும்.” இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.