கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் மாநிலத்தின் சுய மரியாதை கேள்விக்குள்ளாவதை ஏற்கமுடியாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டியுள்ளார்.
பழத்தில் வெடி
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் இங்குள்ள கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அப்போது விஷமிகள் சிலர் அண்ணாசி பழத்துக்குள் வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். இதனை அறியாத யானை, அண்ணாசி பழத்தை உண்ட போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும் நாக்குப் பகுதி கடுமையாக சேதமடைந்தன.
பரிதாபமாக உயிரிழந்த யானை
வலியால் துடிதுடித்த யானை உணவுகூட உண்ண முடியாமல் தவித்து வந்தது. பின்னர் வெள்ளியாறின் தண்ணீரில் நின்றபடி தனது உயிரைவிட்டது. யானை தண்ணீரில் நின்றபடி உயிர்விடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரச் செயலுக்கு திரையுலகினர் உள்பட பலர் தங்களது கண்டனத்தை பதவி செய்து வருகின்றனர்.
நீதியே வெல்லும்
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்; பாலக்காடு மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில், கர்ப்பிணி யானை உயிரிழந்துள்ளது. நிறைய பேர் எங்களிடம் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். உங்களின் ஆதங்கம் வீணாகாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். நீதியே வெல்லும். அதேநேரத்தில் இந்த துன்ப சம்பவத்தை வைத்து சிலர் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சரியான தகவல்கள் தெரியாமல் உண்மையை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். சிலர் இதை வைத்துப் சமூகப் பிரிவினையை ஏற்படுத்த முயன்றுள்ளனர். அது மிகத் தவறான செயலாகும்.
அவதூறு பிரச்சாரம்
எங்கள் மாநிலத்தின் சுயமரியாதையைக் கேள்வி கேட்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கொரோனா வைரஸால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவறு செய்தவர்கள் அதைச் சரிசெய்யத் தயாராக இல்லையென்றால், அது திட்டமிட்டு செய்யும் முயற்சியாகும்”. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
3 பேரிடம் விசாரணை?
இதனிடையே, அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், யார் அந்த நபர் என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த நபரிடம் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக எப்படி செய்தார்கள் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.