ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.

தாயை இழந்த குழந்தை
பிகாரில் முசாபர்பூர் ரயில் நிலைய நடைமேடையில் பசியால் இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயலும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தை தொடர்பான வீடியோ சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மனதை உருக்கிய வீடியோ
கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளனர். வேலையின்றி தவிக்கும் அவர்களின் வறுமை நிலையை அப்பட்டமாக படம் பிடித்து காட்டும் காட்சியாக அந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோ வெளிவந்த நாளன்று அக்குழந்தைக்கு உதவி செய்ய விருப்பம் தெரிவித்தார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
குழந்தை மீட்பு
இந்நிலையில் இந்தக் குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் ஷாருக்கான் தனது அறக்கட்டளையான மீர் மூலம் உதவ முன்வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் அக்குழந்தையை சென்றடைய உதவிய அனைவருக்கும் நன்றி. அவரது தாத்தாவின் அரவணைப்பில் இருந்த அந்தக் குழந்தைக்கு தற்போது நாங்கள் உதவ முன்வந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
அனைவருக்கும் நன்றி
“சிறு குழந்தையை அடைய உதவி செய்த அனைவருக்கும் நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த அந்தக் குழந்தைக்கு அதைத் தாங்குவதற்கான மனவலிமை கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்றும் தனக்கு அந்த வலியின் ரணம் தெரியும் எனவும் கூறியுள்ளார். எங்களது அன்பும் அரவணைப்பும் இக்குழந்தைக்கு எப்போதும் இருக்கும்” என்றும் ஷாருக்கான் கூறியுள்ளார்.















































