தங்களை நம்பி வந்த மிருகத்துக்கு இப்படி ஒரு தீங்கை செய்திருக்கிறார்கள் என்றால் இது குரூரத்தின் உச்சம் என நடிகை ரெஜிஷா விஜயன் ஆவேசத்துடன் கூறியுள்ளார். 
யானை உயிரிழப்பு
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தபோது, அதற்கு அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்துள்ளனர். இதை அறியாமல் அந்த யானை உண்டபோது திடீரென வெடித்து வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களாக உணவு உண்ண முடியாமல் தவித்த யானை, தண்ணீரில் நின்றபடி உயிரிழந்தது. 
முதல்வர் உறுதி
மனிதர்கள் செய்த இந்த மனிதாபமற்ற செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் யானை உயிரிழப்புக்கு காரணமானர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். 
மரண தண்டனை வழங்க வேண்டும்
மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ரெஜிஷா விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், அவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை. தங்களை நம்பி வந்த மிருகத்துக்கு இப்படி ஒரு தீங்கை செய்திருக்கிறார்கள் என்றால் இது குரூரத்தின் உச்சம். இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் கூட மனிதர்கள் செய்வார்களா என நினைத்தே பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மனிதநேயம் எங்கே?
இதேபோல் பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘மனிதநேயம் எங்கே’? என கேள்வி எழுப்பியுள்ள அவர், மனித குலத்தின் மொழி காதல் எனக் கூறுகின்றனர். ஆனால், சில பயங்கரமான மனிதர்கள் மனிதநேயம் தவறிவிட்டனர். இது எவ்வளவு கொடூரமானது என விவரிக்க வார்த்தையில்லை. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.















































