திரைப்படமாக உருவாக உள்ள பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மல்லேஸ்வரி கேரக்டரில் நடிக்க மூன்று ஹூரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ![]()
வரலாற்று படங்கள்
சமீபகால சினிமாக்களில் பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெற்றிகரமாக ஓடி, சாதனை படங்களாக அமைகின்றன. எனவே, அம்மாதிரியான படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு சமீபகால உதாரணமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்‘ படத்தை கூறலாம். இதில் சாவித்ரியாக அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதையில் கீர்த்தி சுரேஷ் நடித்து புகழ் பெற்றார்.
‘தலைவி’
மேலும், பாலிவுட்டில் ‘தங்கல்’, ‘எம். எஸ் தோனி’, ‘பி.எம். நரேந்திர மோடி’ ஆகிய பயோபிக் படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படம் தமிழில் தற்போது உருவாகி வருகிறது.
கர்ணம் மல்லேஸ்வரி
அந்த வரிசையில், பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை ஆவார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட மல்லேஸ்வரி, ராஜீவ்காந்தி கேல் ரத்தினா, பத்ம ஸ்ரீ, அர்ஜுனா விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.
ஹீரோயின் யார்?
இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகிறது. இப்படத்தை தெலுங்கில் ‘ராஜு கடு’ எனும் படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி இயக்கவிருக்கிறார். சத்யநாராயணா, கொனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகிய மூன்று நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.















































